விமானம் பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும்: உறவுக்காரர்கள் வலியுறுத்தல்

  • 30 மார்ச் 2014
கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் செய்த சீன உறவுக்காரர்கள் சிலர் Image copyright Reuters
Image caption கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் செய்த சீன உறவுக்காரர்கள் சிலர்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த சீனர்களின் உறவுக்காரர்கள் சுமார் முப்பது பேர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, விமானம் சம்பந்தமான விடைகள் வெளிவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

விமானத்துக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரிய வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு அவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் தொலைந்துவிட்டது என்று கூறியமைக்காகவும், தகவல்களை வெளியிடுவதில் தாமதம் செய்தமைக்காகவும் மலேசியன் அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சீனாவிலிருந்து உறவுக்காரர்கள் வந்த நேரத்தில் அந்த இடத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது என்றும், மலேசிய தன்னார்வலர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டதால், அவர்களை அணுகுவது சிரமமானது என்றும் அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தேடலில் சுறுசுறுப்பு

இதனிடையே, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானம் தேடப்படும் இடத்தில் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பத்து விமானங்களும், எட்டு கப்பல்களும் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

தேடலில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் ஒன்றான ஆஸ்திரேலியக் கப்பலில் காணாமல்போன விமானத்தின் பதிவுக் கருவியான பிளாக் பாக்ஸை கண்டுபிடிப்பதற்கான ராடார் கருவி ஒன்று இருக்கிறது.

கடல் மட்டத்துக்கு கீழே ஆறு கிலோமீட்டர்கள் ஆழத்திலிருந்து சமிக்ஞை வந்தாலும்கூட கப்பலில் உள்ள இந்த ராடார் கருவி அடையாளம் கண்டுவிடும்.

மிகப் பெரிய ஒரு இடத்தை தேடவேண்டியுள்ளது. ஆனால் பிளாக் பாக்ஸைக் கண்டுபிடிப்பதற்குள்ள காலக்கெடு குறைவாக இருக்கிறது காரணம் இன்னும் ஒரு வாரத்தில் அதன் பாட்டரிகள் தீர்ந்துவிடுமென்று கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று கடலில் மிதக்கும் பல பொருட்கள் கப்பல்களால் சேகரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் எதுவுமே காணாமல்போன விமானத்தில் இருந்து வந்ததா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்தச் செய்தி குறித்து மேலும்