காமன்வெல்த்துக்கு நிதியளிப்பதை இடை நிறுத்தியது கனடா

படத்தின் காப்புரிமை commonwealth logo
Image caption காமன்வெல்த்துக்கு நிதி இடை நிறுத்தம்

காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை வகிக்கும் காலகட்டத்தில் இந்த அமைப்பின் செயலகத்துக்கு வழங்கிவரும் தன் பங்கு நிதியை இடை நிறுத்தி வைக்கப்போவதாக கனடா அறிவித்திருக்கிறது.

இலங்கையின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கவலைகள் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கனடியச் செய்தியாளர்களிடையே பேசுகையில் கூறினார்.

காமன்வெல்த் அமைப்புக்கு கனடா தற்போது சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் ( 20 மிலியன் டாலர்கள்) வரை நிதி வழங்கிவருகிறது.

இந்த நிதியை காமன்வெல்த்தின் பிற திட்டங்களான, சிறார் திருமணங்களைத் தடுப்பது, கட்டாயத் திருமணங்களைத் தடுப்பது, மனித உரிமை மேம்பாடு போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்போவதாக அமைச்சர் ஜான் பேர்ட் கூறினார்.

கனடா இலங்கையில் நடந்த காமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டையும் புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"வாக்கு வங்கி அரசியல்"

கனடாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் வாக்கு வங்கி அரசியல்தான் என இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகள் தமது சுயநலங்களுக்காகவே இப்படியான முன்னெடுப்புகளைச் செய்கின்றன என்றும், கனடாவில் இருந்துகொண்டு பிரிவினைவாதக் கொள்கைகளை முன்னெடுத்து வரும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் அழுத்தமே இதற்கு காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.

அடிப்படை ஜனநாயக விழுமியங்கள் மட்டுமல்லாமல், காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட அவர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளார்கள் எனவும் கூறும் அவர் இந்தச் சவாலை இலங்கை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.