நைஜீரிய பள்ளிச் சிறுமிகள் கடத்தல்: மிஷெல் ஒபாமா கண்டனம்

  • 10 மே 2014
படத்தின் காப்புரிமை The Office of First Lady
Image caption மிஷெல் ஒபாமா

நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்ட செய்திகேட்டு தானும் தனது கணவரும் மிகுந்த கோபமும் மனவேதனையும் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் முதற்பெண்மணி மிஷெல் ஒபாமா கூறியுள்ளார்.

அதிபர் ஒபாமாவின் வாராந்த வானொலி உரையை, அவரது மனைவி மிஷெல் ஒபாமா தனது கண்டனத்தை வெளியிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

சின்னஞ்சிறு பிள்ளைகளின் கனவுகளை பறிக்கும் வளர்ந்த மனிதர்களின் மனசாட்சியற்ற செயல் என்று மிஷெல் ஒபாமா இந்தக் கடத்தல்களை வர்ணித்துள்ளார்.

கடத்தப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்குலக நாடுகளின் நிபுணர்கள் தற்போது நைஜீரியாவில் உள்ளனர்.

இதற்காக கண்காணிப்பு விமானங்களை தந்துதவுமாறு அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் உதவிகள் கோரப்பட்டுள்ளன.