தமிழக அமைச்சரவையில் மூன்று அமைச்சர்கள் பதவி பறிப்பு, புதிதாக மூவர் சேர்ப்பு

  • 19 மே 2014
தமிழகத்தில் அதிமுக அமைச்சரவை அதிக தடவை மாற்றப்பட்டு வந்துள்ளது.
Image caption தமிழகத்தில் அதிமுக அமைச்சரவை அதிக தடவை மாற்றப்பட்டு வந்துள்ளது.

தமிழக அமைச்சரவையில் மூன்று பேர் புதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதோடு மூன்று பேர் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டும் இருக்கின்றனர். தவிர ஒரு சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் அதிமுக அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த எஸ். தாமோதரன், தொழிலாளர் அமைச்சராக இருந்த கே டி பச்சம்மாள், வருவாய்த் துறை அமைச்சராக இருந்த பி வி ரமணா ஆகியோர் தற்போது அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, தொண்டமுத்தூர் தொகுதி உறுப்பினர் எஸ் பி வேல்மணி, சென்னை அண்ணாநகர் தொகுதி உறுப்பினர் எஸ் கோகுல இந்திரா ஆகிய மூவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி விலகும் தாமோதரன் பொறுப்பேற்றிருந்த விவசாயத்துறையின் புதிய அமைச்சராக அமைச்சரவையில் நுழையும் எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக நிர்வாகம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான பொறுப்பு கே பி முனுசாமியிடம் இருந்து மாற்றப்பட்டு, புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ள எஸ் பி வேல்மணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதவி விலகும் பச்சம்மாள் வகித்துவந்த தொழிலாளர் துறை கே பி முனுசாமிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பதவி விலகும் பி வி ரமணா பொறுப்பேற்றிருந்த வருவாய்த்துறை, இளைஞர் நல மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பை வகித்துவந்த ஆர் பி உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நல மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு கைத்தறி மற்றும் நெசவுத்துறையை கவனித்து வந்த டாக்டர் எஸ் சுந்தரராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுந்தரராஜ் விளையாட்டு அமைச்சர் ஆகிவிட்டபடியால், அவரிடம் இருந்த கைத்தறி நெசவுத்துறை அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள கோகுல இந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.