புகுஷிமா: பெண்ணின் தற்கொலைக்கு 5 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு

புகுஷிமா அணு மின் நிலைய விபத்தால் தற்கொலை செய்துகொண்டவரின் கணவர் படத்தின் காப்புரிமை Reuters
Image caption புகுஷிமா அணு மின் நிலைய விபத்தால் தற்கொலை செய்துகொண்டவரின் கணவர்

ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த புகுஷிமா அணுமின் நிலைய விபத்தைத்தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்மணியின் மரணத்துக்கு, விபத்துக்குள்ளான புகுஷிமா அணுமின் நிலைய உரிமையாளரே பொறுப்பு என்று ஜப்பானிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இறந்த பெண்மணியின் கணவருக்கு சுமார் ஐந்துலட்சம் டாலர் இழப்பீடு கொடுக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அணு உலை விபத்தில் இருந்து வெளியான கதிரியக்க ஆபத்து காரணமாக திருமதி ஹமகோ வாடனபேவும் அவரது கணவரும் வசித்துவந்த அவர்களின் வீட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் உருவானது.

சொந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒரு மாதம் கழித்து மன அழுத்தநோயால் பாதிக்கப்பட்ட திருமதி வாடனபே தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது அந்த தற்கொலை மரணத்துக்கு புகுஷிமா அணு ஆலையின் உரிமையாளரான டெப்கோ நிறுவனமே பொறுப்பு என்று தீர்ப்பளித்திருக்கும் ஜப்பானிய நீதிமன்றம், அவரது கணவருக்கு ஏறக்குறைய ஐந்துலட்சம் டாலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

இன்றைய தீர்ப்பு தமது குடும்பத்துக்கு ஓரளவு நீதியையும் நிம்மதியையும் வழங்கியிருப்பதாக ஹமகோவின் கணவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, புகுஷிமா அணு உலையின் உரிமையாளரான டெப்கோ நிறுவனத்திடம் இருந்து புகுஷிமா அணு மின் நிலைய விபத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் இழப்பீடு கோரி வழக்குகள் தொடுப்பதற்கான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்று டோக்யோவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.