காவிரி பிரச்சனை: பிரதமர் நரேந்திர மோதி வேதனை, அமைதிகாக்க வேண்டுகோள்

காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநில மக்களும் அமைதிகாக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Image caption காவிரி பிரச்சனையால் கர்நாடகத்தில் ஏற்பட்ட கலவரம்

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்திருக்கும் அறிக்கையில், காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையின் காரணமாக கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் சூழல் பெரும் வேதனையை அளிப்பதாக நரேந்திர மோதி கூறியிருக்கிறார்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் ஜனநாயத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் கட்டுப்பாட்டுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலமே தீர்வு காண முடியுமென்றும் சட்ட ரீதியாகவே பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியுமென்றும் சட்டத்தை மீறுவது சரியான வழியல்ல என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

Image caption கர்நாடகத்தில் நிகழ்ந்த போராட்டம்

"கடந்த இரு நாட்களாக நடந்த வன்முறையும் தீவைப்புச் சம்பவங்களும் தேசத்தின் சொத்துகளுக்கும் ஏழைகளுக்குமே சேதத்தை ஏற்படுத்தியுள்ளன; தேசம் கடினமான சூழலில் இருக்கும்போது தேசத்தின் பிற பகுதி மக்களைப் போல கர்நாடகா, தமிழ்நாடு மாநில மக்களும் மிகுந்த நுண்ணுணர்வுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் அதேபோல தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து, தேசத்தின் நலனை மனதில் கொண்டு இரு மாநில மக்களும் தேசத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்" என பிரதமர் மோதி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்