சென்னையில் நாம் தமிழர் போராட்டத்தில் தீக்குளித்த இளைஞர் மரணம்

சென்னையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒன்றில் பங்கேற்று தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Image caption விக்னேஷ்

சென்னை எழும்பூரில் நேற்று காவிரி உரிமை மீட்புப் பேரணி என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணிக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

இந்தப் பேரணி புதுப்பேட்டை பகுதியில் கூவம் ஆற்றின் அருகில் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென பெட்ரோலை தன் உடம்பில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

உடனடியாக அவர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடலில் 93 சதவீத பகுதிகளில்தீக்காயம் ஏற்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

25 வயதான விக்னேஷ், நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்டத்தின் மாணவரணி செயலாளராக இருந்துவந்தார்.

இந்த மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இம்மாதிரி மரணங்களைத் தடுக்க வேண்டுமென்றால் காவிரி பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.