காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 18 இந்தியப் படையினரின் இறுதிச் சடங்குகள்

இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஞாயிறன்று கொல்லப்பட்ட 18 இந்தியப் படையினரின் இறுதி சடங்குகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய ராணுவ அதிகாரிகள் இறந்த படையினருக்கு மரியாதை செலுத்த வாரணாசியில் வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டிகள்.

இந்தியாவின் உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷி பாதுகாப்பு பணிகளை மறு ஆய்வு செய்ய காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கு வந்துள்ளார்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில், சுமார் 10 வாரங்களாக பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்தப் போராட்டங்களில் கிட்டத்தட்ட 90 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானோடு பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று இந்திய அரசு விவாதித்து வருகிறது.

தாக்குதல்தாரிகள் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ- முகமது என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என்றும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலில் தனக்கு தொடர்பு இல்லை என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளது.