தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது ஒத்திவைப்பு: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Image caption தேவ கெளடா - சித்தராமையா

தமிழ்நாட்டுக்கு இம் மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினசரி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந் நிலையில், இதுபற்றி ஆய்வு செய்ய, புதன்கிழமை காலை கர்நாடக அமைச்சரவைக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. உச்சநீதிமன்றத்தீர்ப்பு குறித்து முழுமையாக விவாதித்த அமைச்சரவை, அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் முடிவு எடுப்பதற்கு மீண்டும் அமைச்சரவையை கூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை எதிர்க்கட்சித்தலைவர்கள், மாநில எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உள்ளிட்டோர் அடங்கிய‌ அனைத்துக்கட்சிக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேசியத்தலைவருமான எச்.டி.தேவகௌடா, காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் மல்லிகார்ஜுனகார்கே, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர்கள் ஆஸ்கர்பெர்ணான்டஸ், ரகுமான்கான், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா, முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி, மதச்சார்பற்ற மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தேவகௌடா, மல்லிகார்ஜுனகார்கே, குமாரசாமி, வீரப்பமொய்லி உள்ளிட்ட தலைவர்கள் பேசி தங்கள் கட்சிகளின் நிலையை வெளிப்படுத்தினர். பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கலந்துகொள்ளவில்லை.

சித்தராமையா பேசும்போது, தமிழகத்திற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடிதண்ணீரை கொடுக்க காவிரி மேற்பார்வைக்குழு எடுத்தமுடிவை மாற்றி, தண்ணீரின் அளவை விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உயர்த்தி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது எந்த அடிப்படையில் என்பது விளங்கவில்லை என்றார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றதாகும். மேலும் தமிழக அரசின் முன்மொழிவு இல்லாமலே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது சரியானதல்ல. அனைத்துக்கட்சித் தலைவர்களின் கருத்துப்படி கர்நாடக மக்களின் நலன் காக்க மாநில அரசு உறுதியாக உள்ளது என்று சித்தராமையா தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம்

அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து விவாதிப்பதற்காககர்நாடக அமைச்சரவையின் அவசரக்கூட்டம் நடந்தது. இந்தகூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா, மஜத மாநிலத்தலைவர் எச்.டி.குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் குழுத்தலைவர் மல்லிகார்ஜுனகார்கே, முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் குறித்துவிவாதிக்கப்பட்டது.

முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, எதிர்க்கட்சித்தலைவர்கள் தெரிவித்த ஆலோசனைகளின்படி உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் சிறப்புக்கூட்டம் வரும் செப்.23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்ட அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்று தெரிவித்தார். சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்க ஆளுநருக்கு முன்மொழிவு அனுப்பவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் விவாதித்து தீர்மானம் எடுக்கும் வரை தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிடுவது குறித்த முடிவை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றும் சித்தராமையா தெரிவித்தார்.