ஆஸ்கர் களத்தில் இந்தியாவிலிருந்து இயக்குநர் வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரித்த திரைப்படமான விசாரணை, 2017 ஆம் ஆண்டின் அகாடமி விருதுகளுக்கு வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஏற்கனவே மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

Image caption 'விசாரணை' திரைப்படம்

எம். சந்தரகுமாரின் 'லாக் அப்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் பரவலான விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றது. காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களை இந்த படம் தோலுரித்து காட்டுகிறது. முன்னர், ஜீன்ஸ், இந்தியன், குருதிப்புனல், தேவர்மகன், அஞ்சலி, நாயகன், தெய்வமகன் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பில் பங்கேற்கும் திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டன.

Image caption நடிகர் தினேஷ்

தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு குடியேறிய 4 தமிழர்களின் வாழ்கையை மையப்படுத்தி விசாரணை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. செய்யாத குற்றத்திற்காக, தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே குண்டூர் போலிசால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். குற்றம் மற்றும் அரசியல் சதி வலையில் சிக்கி இறுதியாக என்கவுண்டரில் கொல்லப்படுகிறார்கள். இந்த படத்தில் வரும் காட்சிகளுக்கும், சில உண்மை சம்பவங்களுக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Image caption 'விசாரணை' திரைப்படம்

இந்த திரைப்படம் முன்னர் 72வது வெனீஸ் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்தெடுக்கப்பட்டது. மூன்று தேசிய விருதுகளை பெற்ற பிறகு, தயாரிப்பாளர் தனுஷ் தனது பெருமிதங்களை வெளிப்படுத்தினார்.

விசாரணைக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும், நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், மறைந்த தொகுப்பாளர் டி.இ. கிஷோருக்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருதும் இந்தப் படத்தின் மூலம் கிடைத்து.