ராம்குமார் உடலுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

புழல் சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடலுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ராம்குமார் தரப்பு தெரிவித்துள்ளது.

Image caption ராம்குமார் (கோப்புப்படம்)

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஸ்வாதி என்ற இளம்பெண் ரயில் நிலையம் ஒன்றில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிறையில் இருந்த மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்யும்போது அரசு மருத்துவர்களுடன் தங்களது தரப்பு மருத்துவர்களையும் உடனிருக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு முன்பாக அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, முடிவெடுப்பதில் இரு நீதிபதிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து மூன்றாவது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் முன்பாக இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யும்போது தங்களது தரப்பு மருத்துவராக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் சம்பத்குமாரை உடனிருக்க அனுமதிக்க வேண்டுமென பரமசிவம் தரப்பு வாதிட்டது.

ஆனால், அரசுத் தரப்பில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

Image caption சென்னை உயர்நீதி மன்றம் (கோப்புப்படம்)

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், தனியார் மருத்துவரை பிரேத பரிசோதனையின்போது அனுமதிக்க முடியாது என்றும் வேண்டுமானால், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரை வைத்து பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தார். 27ஆம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்க வேண்டுமென்றும் எய்ம்ஸ் மருத்துவருக்கான கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயை அரசு அளிக்க வேண்டுமென்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்பவதாக ராம்குமார் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்கரசுப்பு, மூன்று நீதிபதிகளும் மூன்று விதமான தீர்ப்பை அளித்திருப்பதால், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கோரப்போவதாகத் தெரிவித்தார்.

இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறந்த ராம்குமாரின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை செய்வது மீண்டும் தாமதமடைந்துள்ளது.

தற்போது ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.