இந்து முன்னணி பிரமுகர் கொலை; கோவையில் பதற்றம்

கோவையில் இந்து அமைப்பு ஒன்றின் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து நகரின் பல பகுதிகளில் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார் என்பவர் நேற்று இரவு பத்தரை மணியளவில் அவரது வீட்டிற்கு சிறிது தூரத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாலையிலிருந்தே கோவைமுழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. மையப் பகுதிகள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்ததால் 11 மணியளவில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த தனியார் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

Image caption கொளுத்தப்பட்ட காவல் துறை வாகனம்

காலை முதலே சசிக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினருக்கும் குவிக்கப்பட்டனர். டவுன்ஹால் பகுதியில் பதினோரு மணியளவில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டதால் காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தது.

பிற்பகலில் சசிகுமாரின் இறுதி ஊர்வலம் சென்ற பாதையில் இருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கோட்டை மேடு என்ற பகுதிக்குச் செல்லும் சாலைகள் சீல்வைக்கப்பட்டன. வழிபாட்டுத் தலம் ஒன்றின் அருகில் ஊர்வலம் சென்றபோது, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

Image caption கோவையின் பல பகுதிகளில் கல்வீச்சு

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த இறுதி ஊர்வலம் சென்ற வழியெங்கும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறை வாகனம் உட்பட ஐந்து வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.

கொலையாளிகளை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் பல பகுதிகளில் பதற்றம் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சசிகுமாரின் மரணத்தைத் தொடர்ந்து சிறுபான்மையினர் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்