தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழக தேர்தல் ஆணையர் சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (26.09.16) முதல் தொடங்கும்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3.. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

அக்டோபர் 6-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

91,098 வாக்குச்சாவடிகளில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில், மாநிலம் முழுதும் உள்ள 5.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கட்சி அடிப்படையிலும் கட்சி அடிப்படை இல்லாமலும் நடைபெறும் தேர்தல்கள் குறித்தான விவரங்களையும் தமிழ்நாடு மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் சீதாராமன் வெளியிட்டார்.

தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும் நேரடி தேர்தலுக்கு பிறகு, மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் என 13,362 பொறுப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் தனியாக நடைபெறும்.

இந்த முறை காலை 7 மணிக்கே வாக்குப்பதிவுகள் தொடங்கும் என்றும் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் சீதாராமன் குறிப்பிட்டார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.