தமிழக உள்ளாட்சித் தேர்தல் கால அட்டவணை குறித்து பல கட்சிகள் அதிர்ச்சி

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை அதிர்ச்சி அளிப்பதாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Image caption உள்ளாட்சித் தேர்தல் கால அட்டவணை குறித்து சர்ச்சை

இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21 ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை தமிழ்நாடு மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் சீத்தாராமன் நேற்று ஞாயிறன்று நடத்தினார்.

அப்போது தான் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணைகளை சீத்தாராமன் வெளியிட்டிருந்தார்.

கட்சிகள் கண்டனம்

அட்டவணை வெளியிட்ட தினத்தின் மறுநாள் முதலே வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கப்படும் கால அவகாசம் துவங்கும் என்கிற அறிவிப்புக்கு தான் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தலைமையிலான தங்கள் கூட்டணி தயார் நிலையில் தான் உள்ளது என்கிற போதிலும், ஜனநாயகத்தில் இது போன்ற அவசர அறிவிப்புகளை ஏற்க முடியாது என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இது குறித்து குறிப்பிடுகையில், இந்த அவசர ஏற்பாடுகளை பார்க்கும் போது தேர்தல் அதிகாரிகள் ஒரு சார்பு நிலையை எடுத்துவிட்டார்கள் என்றுதான் தெரிய வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேவையான அவகாசம் வழங்கப்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகளும் கூறியுள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அனைத்து முக்கிய அறிவிப்புகளும் கால தாமதமாக செய்யப்பட்டுள்ள காரணத்தால், அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றார்.

வழக்கமான நடைமுறைகளை தேர்தல் ஆணையர் மாற்றியுள்ளதாக தமிழகத்தின் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தல் முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றத்தின் காரணமாக, நேரடி மற்றும் மறைமுக தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.