இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை புறக்கணிக்க இந்தியா முடிவு

படத்தின் காப்புரிமை AFP
Image caption அதிகரிக்கும் பகைமை

தெற்காசியப் பிராந்தியத்தில், எல்லை தாண்டிய பயங்கவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.

சார்க் மாநாடு நவம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்திய எல்லையில் உள்ள ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாாதிகள்தான் இதற்குக் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

காஷ்மீர் பிராந்தியத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இருந்து திசை திருப்பவே இந்தியா இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கூறுவதாக பாகிஸ்தான் கூறுகிறது.

வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 1985-ம் ஆண்டு சார்க் கூட்டமைப்பை ஏற்படுத்தின. 2005-ல் ஆப்கானிஸ்தானும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, 19-வது சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை என்று கூறி, சார்க் அமைப்பின் தற்போதைய தலைமையான நேபாளத்திடம் தனது முடிவை இந்தியா தெரிவித்துவிட்டதாக, இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கடந்த திங்கட்கிழமை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, இதுபோன்று தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம், காஷ்மீரைக் கைப்பற்றும் கனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்றும், காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடரும் என்றும் சுஷ்மா குறிப்பிட்டார்.

வங்கதேசமும் புறக்கணிப்பு

இந்தியாவைத் தொடர்ந்து, வங்கதேசமும், சார்க் மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக வங்கதேச பிரதமரின் ஊடக ஆலோசகர் இக்பால் சோபன் செளத்ரி, பிபிசி வங்கமொழி சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார். உள்நாட்டு நிலவரங்களே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்