3 நாளில் காவிரி மேலாண்மை வாரியம்; 6 நாட்களுக்கு 6 ஆயிரம் கனஅடி நீர்: உச்சநீதிமன்றம் ஆணை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

அடுத்த மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு தினசரி 6 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று வியாழக்கிழமை நடந்த கூட்டம் பற்றி மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி விளக்கினார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், கர்நாடக முதலமைச்சர், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றதனர். அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. முட்டுக்கட்டை நீடிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், கர்நாடக அரசு நிபுணர் குழுவை அமைத்து, இரு மாநில அணைகளிலும் உள்ள நீர் இருப்பு அளவை மதிப்பிட வேண்டும். அந்தக்குழுவின் அறிக்கை அடிப்படையில் ஒத்துழைக்கத் தயார் என்று கர்நாடகத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தமிழகம் அதை ஏற்க மறுக்கிறது என்று ரோஹத்கி சுட்டிக்காட்டினார்.

அதைக் கேட்ட நீதிபதிகள், ``அப்படியானால், மூன்று நாட்களில், அதாவது திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அந்த வாரியத்தின் சார்பில், இரு மாநில அணைகளின் நீர் இருப்பைப் பார்வையிட்டு அக்டோபர் 6-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், எவ்வளவு நீர் திறந்துவிடுவது என்று உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக அரசுக்காக வாதிட நாரிமன் மறுப்பு

இதற்கிடையில், விசாரணையின்போது, மேலும் ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது. கர்நாடக அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், கர்நாடகத்துக்காக வாதாட நான் தயாராக இல்லை என்று கூறி, தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதேபோல், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில்லை என கர்நாடக சட்டமன்றத்தில் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி, முதலமைச்சர் அளித்த கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

கூட்டாட்சி ஜனநாயகத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டியது ஒவ்வொரு அரசின் சட்டப்பூர்வக் கடமை என்று கூறிய நீதிபதிகள், நாரிமனின் நிலையைப் புரிந்து கொள்வதாகவும், அதே நேரத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, உச்சநீதிமன்றம் செப்டம்பர் 5, 12, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் அமல்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது இறுதி வாய்ப்பு என்று குறிப்பிட்ட உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு கர்நாடகம் தினசரி 6 ஆயிரம் கனஅடி நீர் திறநதுவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை அமல்படுத்தத் தவறினால் மீண்டும் எங்களது கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்