பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ராம்குமாரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட ராம்குமார் என்ற இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Image caption மருத்துவமனை வளாகத்தில் கூடிய கூட்டம்

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரான ஸ்வாதி என்ற இளம்பெண், கடந்த ஜூன் 24ஆம் தேதியன்று ரயில் நிலையம் ஒன்றில் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சென்னையை அடுத்துள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதியன்று ராம்குமார் சிறையில் உள்ள மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது.

ராம்குமாரின் சாவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதால், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரும் உடனிருக்கவேண்டும் என்ற ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை நிராகரித்தன.

இந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவர் குழு ராம்குமாரின் உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் இன்று பிரேதப் பரிசோதனை செய்தது.

பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை தங்களுக்குத் தர வேண்டும் என ராம்குமாரின் தந்தை பரமசிவம், உடன் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரினார்.

ஆனால், பிரேதப் பரிசோதனையைப் பார்வையிட்ட நீதிபதி தமிழ்செல்வி அதற்கு மறுத்துவிட்டார். அவை நீதிமன்றத்தில் மட்டுமே ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்குப் பிறகு ராம்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

ராம்குமாரின் உடல் இன்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதையொட்டி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்