ஜெயலலிதா உடல்நிலை குறித்து தகவல் அளிக்கும்படி கோருகிறது உயர்நீதிமன்றம்

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Image caption ஜெயலலிதா உடல் நிலை குறைத்து தகவல் கோருகிறது உயர்நீதிமன்றம்

சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிவரும் நிலையில், அவரது உடல் நலம் குறித்து உண்மை நிலவரத்தை வெளியிடவும் அவர் குணமடைந்துவரும்வரை, தற்காலிக முதலமைச்சர் ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டுமென்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென டிராஃபிக் ராமசாமி கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை.

இதையடுத்து, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மனுவை விசாரிக்க வேண்டுமென டிராஃபிக் ராமசாமி கோரினார்.

ஆனால், முதல்வரின் உடல்நலம் குறித்த செய்திகளை தெரிவிக்கக் கோரக்கூடாது, அது தனிநபர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜெயலலிதா அரசுப் பதவி வகிப்பதால், அதிகாரபூர்வமாக அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அவரது உடல்நலம் குறித்து அக்டோபர் ஆறாம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென்று கூறி, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்