இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட கஞ்சா வவுனியாவில் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பெருந்தொகை கஞ்சா கடத்தல் முயற்சியை வவுனியா காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.

Image caption வவுனியாவில் முறியடிக்கப்பட்ட கஞ்சா கடத்தல்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்குக் கடத்தி வரப்பட்ட 102 கிலோ 900 கிராம் கேரள கஞ்சா , நாட்டின் தென்பகுதிக்குக் கடத்திச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நவீன ரக வாகனம் ஒன்றில் வாழைக்குலைகள் மற்றும் தேங்காய் மூட்டைகளுக்குக் கீழ் 5 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா, 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சந்தைப் பெறுமதி வாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா

யாழ்ப்பாணத்தில் இருந்து நாட்டின் தென்பகுதியை நோக்கிச் சென்ற இந்த நவீன ரக வாகனத்தை, அதிகாலை 2.30 மணியளவில் வவுனியா நகர நுழைவாயிலில் வைத்து காவல்துறையினரால் சோதனையிடப்பட்டபோது, அந்த வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் தப்பியோடியதாகவும், மற்றுமொருவரைக் கைது செய்து, வாகனத்தையும் அதன் உள்ளே இருந்த கஞ்சா மற்றும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து பெருமளவில் கேரள கஞ்சா இலங்கையின் வட கடலின் வழியாக யாழ்ப்பாணத்திற்குக் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்பரப்பிலும், கடலோரங்களிலும், வீதிகளில் வாகனங்களிலும் கஞ்சா கடத்தி வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Image caption வவுனியா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சா

வவுனியாவில் முதன் முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டிருப்பதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்