தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு

நேற்று, தமிழக உள்ளாட்சித் தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது.

Image caption சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப் படம்)

இதனை அவசர வழக்காகக் கருதி விசாரிக்கவும், மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளில் துவங்கி, மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகள் வரை பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது.

இந்நிலையில், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறைப்படி பின்பற்றப்படவில்லையெனக் கூறி திமுக-வின் சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தல் தொடர்பான மூன்று அரசாணைகளை ரத்துசெய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிக்கை வெளியிட்டு, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலை ரத்துசெய்யக்கூடாது, விதிமுறைகளுக்கு உட்பட்டே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது; ஆகவே தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென் என தேர்தல் ஆணையத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, இரு நீதிபதி அமர்வின் முன்பாக நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்வதற்கு முன்பாகவே திமுக-வின் சார்பில் கேவியட் எனப்படும் முன் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மாநில தேர்தல் ஆணையம் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால், தங்களையும் விசாரிக்க வேண்டும் என அந்த முன் முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

முந்தைய தேர்தல் அறிக்கையின்படி, வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

தொடர்புடைய தலைப்புகள்