காவிரி உயர் தொழில்நுட்பக் குழு நியமனம்

காவிரி பாசன பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக, உயர்மட்ட தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காவிரி (கோப்புப் படம்)

இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த யோசனையை ஏற்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 4) உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காவிரி உயர் தொழில்நுட்பக் குழுத் தலைவராக மத்திய நீர் வள ஆணையர் ஜி.எஸ்.ஜா இருப்பார். இக்குழுவில் ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.மசூத் ஹுசேன், ஆர்.கே. குப்தா ஆகியோரும் தமிழகம், கர்நாடகம் ஆகியவற்றின் அரசுத் தலைமைச் செயலர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு தலைமைப் பொறியாளர் ஆகியோரும் உறுப்பினர்களாக இருப்பர்.

இக்குழுவினர் பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) காலை 9.30 மணிக்கு கூடி குழுவின் ஆரம்ப நிலைப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவர். இதைத் தொடர்ந்து, காவிரி பாசனப் பகுதிகள், ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றுக்கு இந்த உயர் தொழில்நுட்பக் குழுவினர் சென்று களத்தின் உண்மை நிலவரத்தைக் கண்டறிவர்.

பின்னர், இக்குழு தயாரிக்கும் ஆய்வறிக்கை உச்ச நீதிமன்றத்தில் வரும் 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.