முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்களைக் கோரிய மனு தள்ளுபடி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல்களை வெளியிட வேண்டும், தற்காலிக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது உடல் நலம் குறித்து உண்மை நிலவரத்தை வெளியிடவும் அவர் குணமடைந்துவரும் வரை, தற்காலிக முதலமைச்சர் ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டுமென்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மருத்துவமனை வாசலில் அ.தி.மு.க தொண்டர்கள்

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென டிராஃபிக் ராமசாமி கோரியிருந்தார். இந்த வழக்கு அக்டோபர் 4 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு முதல்வரின் உடல் நலம் குறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது.

இன்று தலைமை நீதிபதி முன்பாக அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கணேசன், தன் கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், உடல்நலமற்று இருப்பவர்களின் புகைப்படத்தை வெளியிட முடியாது என்றும், அரசு தற்போது செயல்பட்டு வருவதால் தற்காலிக முதல்வரை நியமிக்க முடியாது என்றும் கூறி வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்தார்.

முதல்வரின் உடல்நலம் குறித்த செய்திகளை மருத்துவமனை வெளியிட்டு வருவதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய தலைப்புகள்