தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கைப் பிரதமரிடம் உத்தரவாதம் பெற ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு வன்மையாக கண்டிப்பதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கைப் பிரதமரிடம் இந்தியா உத்தரவாதம் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Image caption ஜி. கே. வாசன் ( கோப்புப் படம்)

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, நேற்றிரவு ராமேஸ்வரம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, அவர்களின் வலைகள் மற்றும் மீன்களை கடலில் எறிந்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் வாசன்.

இலங்கை பிரதமர் இந்தியா வந்துள்ள இச்சமயத்தில், தமிழக மீனவர்கள் மீதி இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தி இருப்பது கண்டனத்துக்குரியது, இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை இலங்கை பிரதமரிடம் நேரடியாக விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 104 படகுகளை மீட்டுத்தர இலங்கைப் பிரதமரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார் வாசன்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு வன்மையாக கண்டிப்பதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கைப் பிரதமரிடம் இந்தியா உத்தரவாதம் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று ஜி.கே. வாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்