'அசாத்திய ஆளுமை, எண்ணற்ற போராட்டங்கள்': ஜெயலலிதா குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார் வாஸந்தி

காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் சுயசரிதையை எழுதிய எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வாஸந்தி, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை, சிறப்பு அம்சங்கள் மற்றும் போராட்ட குணம் ஆகியவை குறித்து 'பிபிசி தமிழோசை' ஆசிரியர் மணிவண்ணனிடம் பகிர்ந்து கொண்டார்.

Image caption ஜெ. ஜெயலலிதா

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய ஜெயலலிதா

ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை குறித்து வாஸந்தி கூறுகையில், ''அரசியல் வாழ்வில் சாதனை புரிவதற்கு பல தடைகளை ஆரம்ப காலங்களில் ஜெயலலிதா சந்தித்தார்.

ஒரு பெண்ணாக, குறிப்பாக நடிகையாக ஜெயலலிதா இருந்தது, மேலும் திராவிட அரசியலின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள பிராமண வகுப்பை சேர்ந்தவர் அவர் என கருதப்பட்டது ஆகியவை அவர் சந்தித்த தடைகளாகும்.

ஆனால், அசாதாரண அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா, தான் சந்தித்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை புரிந்தவர் என்றார் வாஸந்தி .

2004ம் ஆண்டு பிபிசியின் ‘ஹார்ட் டாக்’ நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா அளித்த பிரபலமான பேட்டியின் எழுத்து வடிவத்தைப் படிக்கஜெயலலிதா பிபிசிக்கு வழங்கிய பேட்டியின் எழுத்து வடிவம்

Image caption எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வாஸந்தி

கடந்த 1982-ஆம் ஆண்டில், கடலூரில் 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் ஜெயலலிதா தனது முதல் அரசியல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ' நடிகை' என்ற ரீதியில் அவர் கடுமையாக எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் தனி நபர் தாக்குதலுக்கும், உதாசீனத்துக்கும் உள்ளானார்'' என்று நினைவுகூர்ந்த வாஸந்தி, ஜெயலலிதாவின் போராட்ட குணம் எத்தகையது என்று உதாரணங்களைக் கொண்டு எடுத்துரைத்தார்.

அரசியல் வெற்றிடத்தை நிரப்பியவர்

''கடுமையான விமர்சனங்கள் மற்றும் தனிநபர் தாக்குதல்களை சந்தித்து வந்த ஜெயலலிதா, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோரைப் போல சொல்லாற்றல் மிக்கவர் அல்ல.

மொழி வித்தகராகவோ, அடுக்குத் தொடரில் புலமைப் பெற்றவரோ இல்லையெனினும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியிலும், அரசியல் தளத்திலும் எழுந்த வெற்றிடத்தை, தன் கடின உழைப்பாலும், அரசியல் குறித்த உன்னிப்பான பார்வையாலும் ஜெயலலிதாவால் நிரப்ப முடிந்தது'' என்று வாஸந்தி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதா

ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை குறித்து மேலும் நினைவுகூர்ந்த வாஸந்தி , கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா, அதிகமாக வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும், இப்பழக்கமும், நினைவாற்றலும் அவர் கட்சி பொறுப்பில் மேலும் முன்னேற பெரிதும் உதவியது என்று குறிப்பிட்டார்.

தேவைப்பட்டது இரும்புக்கரம்

கட்சித் தொண்டர்கள், ஊடகங்கள் என்று பலராலும் அணுக முடியாதவர் ஜெயலலிதா என்று கூறப்பட்டது, அவர் முதல்வர் பதவியேற்ற பிறகுதான் என்று கூறிய வாஸந்தி , அவ்வாறு அவர் அணுக முடியாதவர் போல் தோற்றமளிப்பதற்கு காரணம் யாரையும் எளிதில் நம்ப முடியாது என்ற திடமான எண்ணம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதுதான் என்று விவரித்தார்.

சிறந்த நிர்வாகத் திறனுள்ள அதிகாரிகளின் துணை கொண்டு, தனது ஆளுமை திறனால் ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. யாரையும் நம்பாத தனது குணத்தால், இரும்புக்கரம் கொண்டு ஆட்சியையும், கட்சியையும் நடத்திய போக்கு ஆரோக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம் என்றாலும், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் சந்தித்த எண்ணற்ற சிக்கல்களையம், ஏமாற்றங்களையும் சமாளிக்க அவருக்கு அந்த இரும்புக்கரம் தேவைப்பட்டது என்று வாஸந்தி கூறினார்.

Image caption 2016-இல் தமிழக சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா

ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்களுக்கான நலத்திட்டங்கள்

அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஜெயலலிதாவின் ஆட்சியில் பல நலத்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவரது ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இலவசத் திட்டங்கள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும், அத்திட்டங்கள் பலன் தந்துள்ளதாக பல பெண்கள் கருதுகின்றனர் என்று வாஸந்தி குறிப்பிட்டார்.

அனைத்து மகளிர் காவல் நிலையம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்கள் என்று தெரிவித்த வாஸந்தி, 'தொட்டில் குழந்தை திட்டம்' பல காரணங்களால் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியது என்றும் குறிப்பிட்டார்.

Image caption பெண்களின் முதல்வரா ஜெயலலிதா?

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் நிலை என்னவாகும்?

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி. ஆர், தனக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கவில்லை. ஜெயலலிதாவும் அவ்வாறே தான். அவருக்குப் பிறகு கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை யாரும் நிரப்புவது சுலபமல்ல என்று தெரிவித்த வாஸந்தி , அதிமுகவின் எதிர்காலம் குறித்து குழப்பமான சூழல் காணப்படுகிறது என்றும், அதிமுக என்ற இயக்கம் உடைவதற்கு கூட வாய்ப்புண்டு என்று மேலும் கூறினார்.

Image caption ஜெயலலிதா குறித்து சுயசரிதை எழுதியுள்ள வாஸந்தி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட தான் சந்தித்த பல தடைகளை நினைவுகூர்ந்த வாஸந்தி, அதில் ஜெயலலிதாவின் பலம், பலவீனம் என இரண்டும் சரிசமமாக இடம்பெற்றது என்று குறிப்பிட்டார்.

தனது கடந்தகால வாழ்க்கையை திரும்பிப் பார்க்க விருப்பமில்லாதவராக இருந்தார் ஜெயலலிதா, அதனால்தானோ என்னவோ, அவர் குறித்து தான் எழுதிய தனது புத்தகத்துக்கு ஜெயலலிதா தடை கோரினார் என்று வாஸந்தி தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்