“தண்ணீர் கேட்காதீர்கள்“ - காவிரி ஆய்வுக்குழுவிடம் கர்நாடக விவசாயிகள் கோரிக்கை

காவிரி நதிப்படுகை பாசனப்பகுதிகளை காவிரி உயர்தொழில்நுட்பக்குழு பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ளது.

Image caption மத்திய நீர் ஆணையத்தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் மத்திய நீர்வளத்துறை குழு அமைத்தது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், காவிரி நதிப்படுகை அணைகளை பார்வையிடுவதற்காக காவிரி உயர் தொழில்நுட்பக்குழுவை அமைக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அக்டோபர் 4 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மத்திய நீர் ஆணையத்தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் குழு அமைத்து மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

உயர் தொழில்நுட்பக்குழு

இந்த குழுவில் மத்திய நீர் ஆணைய உறுப்பினர் ஜி.மசூத்ஹுசேன், ஹைதராபாத்தை சேர்ந்த‌ கிருஷ்ணா மற்றும் கோதாவரி அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப மையம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரிவுத்தலைவர் ஆர்.சுப்ரமணியம், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பி.சுவாமிநாதன், கண்காணிப்புப் பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஏ.ராஜசேகர், கேரள மாநிலத்தின் மாநிலங்களிடை நதிநீர்ப்பிரிவின் அதிகாரி வி.கே.மகாதேவன், கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் சுபாஷ்சந்திரகுன்ட்டியா, நீர்வளத்துறை முதன்மைச்செயலாளர் ராகேஷ்சிங், காவிரி நீர்ப்பாசனக்கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.எச்ன்.சிக்கராயப்பா உள்ளிட்டோர் இடம்பெற்ற்றிருந்தனர்.

கர்நாடகாவில் ஆய்வு

பெங்களூரு, விதானசௌதாவில் வெள்ளிக்கிழமை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காவிரி உயர் தொழில்நுட்பக்குழுவினரை சந்தித்து கர்நாடகத்தின் வறண்ட நிலையை விளக்கும் 30 பக்க மனுவை வழங்கினார்.

மேலும், கர்நாடகத்தின் காவிரி நதிப்படுகை அணைகளில் இருப்புள்ள தண்ணீர் அளவு, பாசனநீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள் நிலை, நிலுவைப்பயிருக்கு தண்ணீர் இல்லாதது குறித்து விளக்கினார்.

இதை தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியா மாவட்டம், மத்தூர் வந்த காவிரி உயர் தொழில்நுட்பக்குழுவினர், காவிரி நதிப்படுகையின் மத்தூர் வட்டத்தின் ஹுலிகெரேபுரா, ஹம்மனஹள்ளி, தைலூரு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள ஏரிகளை பார்வையிட்டனர்.

உயர் தொழில்நுட்பக்குழுவினரை சந்தித்த அக்கிராமங்களின் மக்கள் தங்களுக்கு பாசனத்திற்கு நீர் இல்லாத குறையை எடுத்துரைத்து இழப்பீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.

விவசாயிகளின் கருத்துகளை பதிவு செய்துகொண்ட உயர்தொழில்நுட்பக்குழுவினர், ஏரிகளில் மழையில்லாததையும், விளைநிலங்களில் பயிர்கள் காய்ந்து வாடியிருப்பதையும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஏரிகள் நிரம்பாததால் தங்களால் விவசாயம் எதையும் செய்ய இயலவில்லை.

மேலும் குடிக்கவே நீர் இல்லாத நிலை உருவாகியுள்ளதையும் அப்பகுதி விவசாயிகள் விளக்கிக்கூறினர். அங்கிருந்து மளவள்ளி வட்டத்தின் தொட்ட அரசிகெரே, மலவள்ளி, கிரிகாவலு ஏரிப்பகுதிகளையும், பாசனப்பகுதிகளையும் பார்வையிட்டனர். இங்கெல்லாம் ஏரியில் நீர் இல்லாததையும், விவசாயிகளின் கருத்தையும் பதிவு செய்துகொண்டதோடு, வாடியிருந்த நிலுவைப்பயிர்களின் செடிகளையும் பறித்துக்கொண்டனர்.

தண்ணீர் கேட்காதீர்கள்

தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் விவசாயிகளிடம் கேள்வி மேல் கேள்வி துளைத்தெடுத்தப்படி இருந்தனர். உள்ளூர் அதிகாரிகளிடமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியபடி இருந்தனர். தமிழக அதிகாரிகளை சந்தித்த அப்பகுதி விவசாயிகள், எங்கள் நிலையை அறிந்து தண்ணீர் கேட்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.

நடிகை ரம்யா மனு

இதனிடையே, மத்தூரில் காவிரி உயர்தொழில்நுட்பக்குழுவினரை சந்தித்த முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யா, மனு ஒன்றை அளித்தார். காவிரி நதிப்படுகை அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. இப்பகுதி குடிநீர் மற்றும் பாசனநீர் தேவையை நிறைவு செய்யக்கூட தண்ணீர் இல்லை. இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் தருவது எப்படி சாத்தியம்? மழை பொய்த்துப்போகும் பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை என்பதால் அப்படிப்பட்ட காலங்களில் கர்நாடகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, பேரிடர்கால நதிநீர் பங்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று தனது மனுவில் ரம்யா குறிப்பிட்டிருந்தார்.

ஆய்வு நிறைவு

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு கிருஷ்ணராஜசாகர் அணைக்கு சென்ற காவிரி உயர் தொழில்நுட்பக்குழுவினர், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்கள். மண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜசாகர் அணை, கே.ஆர்.பேட் பாசனப்பகுதி, ஹாசன் மாவட்டத்தின் ஹொளேநரசிபுரா பாசனப்பகுதி, ஹேமாவதி அணைப்பகுதியை சனிக்கிழமை பார்வையிடுகிறார்கள். தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமையும் விரிவாக்கி கபினி, ஹாரங்கி நதிப்படுகை பகுதிகளை பார்வையிட காவிரி உயர் தொழில்நுட்பக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, பயணத்தின் முடிவில் உயர் தொழில்நுட்பக்குழுத்தலைவர் ஜி.எஸ்.ஜா, செய்தியாளர்களிடம், கர்நாடகத்தின் காவிரி நதிப்படுகை பாசனப்பகுதியில் வறட்சி உள்ளதை காணமுடிந்தது. எனினும், குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் பார்த்துவிட்டு முழுமையான முடிவுக்கு வந்துவிடமுடியாது. இன்னும் 2 நாள்கள் காவிரி நதிப்படுகை அணைகள், பாசனப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபிறகு, குழு உறுப்பின‌ர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் அக்.17 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவிருக்கிறோம் என்றார் அவர்.

தொடர்புடைய தலைப்புகள்