தமிழகத்திற்கு இடைக்கால முதல்வர் கோரிக்கை: திமுக - காங்கிரஸ் மாறுபட்ட கருத்து

தமிழகத்திற்கு இடைக்கால முதலமைச்சரையோ, புதிய முதலமைச்சரையோ நியமிக்க வேண்டியது மிக அவசியம் என சில தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் இக்கருத்தை வலியுறுத்தினார்.

இதேப்போன்ற கருத்தை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதல்வரின் உடல் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோ என்கிற சந்தேகம் வலுத்துள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற காரணங்களாலும், தமிழக அரசின் நிர்வாகத்தை தேக்கமின்றி நடத்திச்செல்லவும், ஜனநாயக ரீதியிலான 'வெளிப்படையான ஒரு இடைக்கால ஏற்பாடு' இன்றியமையாத தேவையாக உள்ளதாகவும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதற்கிடையே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள இந்த கோரிக்கையை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Image caption திருநாவுக்கரசர்

திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிப்பதாக கூறும் காங்கிரஸ் கட்சியின் இந்த கருத்து, அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை உண்டாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார்.

அதேப்போல பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சயின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இன்று ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்.

தொடர்ந்து கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களும், ஜெயலலிதாவின் நலன் விசாரிக்க சென்னை வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்