காவிரி டெல்டா மாவட்டங்களின் கள நிலவரம் குறித்து ஆய்வு: ஜி.எஸ்.ஜா

தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் இன்றைய உண்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதாக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்தார்.

Image caption மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா (கோப்புப் படம்)

தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் இன்றைய உண்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதாக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி அமைக்கப்பட்ட, உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினர் தமிழகத்தில், இரண்டாவது நாளாக இன்று (திங்கள் கிழமை) தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 14 அதிகாரிகளை கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப குழுவிற்கு மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமை வகிக்கின்றார்.

இன்று அவர்கள் ஆய்வு மேற்கொள்ள சென்ற இடங்களில் எல்லாம், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்தனர்.

அவற்றை பெற்றுக்கொண்ட ஜி.எஸ்.ஜா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மாநில அணைகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கையை வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் உள்ள உண்மை நிலை மற்றும் கள நிலவரம் குறித்து தான் இன்றைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அக்குழுவுக்கு விளக்கம் அளித்தார்.

தமிழக டெல்டா மாவட்டங்களின் இன்றைய கள நிலவரம் குறித்த ஆய்வுக்கு முன்னர், இந்தக் குழு, இரு மாநிலங்களிலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைப் பகுதிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது.