பதின்ம வயது இளைஞரின் வாலை ஒட்ட நறுக்கிய மருத்துவர்

தண்டுவடத்தின் கீழ் பகுதியில் 20 சென்டி மீட்டர் நீளத்தில் வால் வளர்ந்திருந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர், அதனை அகற்றிவிட அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

Image caption அழகியல் மற்றும் உளவியல் ரீதியாக அவனை தொந்தரவு கொடுப்பதாக இந்த வால் அமைந்து விட்டது

தற்போது 18 வயதாகியிருக்கும் இவருக்கு, 14-வது பிறந்த நாளுக்கு பின்னர் தான் இந்த வால் வளர தொடங்கியதாம்.

நாக்பூரை சேர்ந்த இந்த இளைஞரும், அவரது குடும்பத்தினரும், இவருக்கு வால் இருப்பதை பிறர் அறிந்தால், அனைவரின் கேலி கிண்டலுக்கு ஆளாகலாம் என்று கவலையடைந்ததால், இந்த வால் வளர்வதை ரகசியமாக வைத்துள்ளனர்.

மிகவும் நீளமாக வளர்ந்த பின்னர், அதில் எலும்பு உருவாகி இருந்ததை கண்ட அவர்கள் இறுதியில் மருத்துவரை அணுகியுள்ளனர்.

இது மாதிரி மனிதருக்கு வால் வளர்வது மிகவும் அரிது என்றாலும், மனிதரிலேயே மிக நீளமாக வால் வளர்ந்திருப்பது இந்த இளைஞருக்கு தான் என்று கருதப்படுகிறது.

Image caption தண்டு வடத்தில் கோளாறு காரணமாக கருப்பையில் இருந்தபோதே இவருக்கு வால் முளைத்திருக்கலாம். வளர்ந்த பின்னர் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது -மருத்துவர்

"உடலுக்கு வெளியே இந்த வால் வளர தொடங்கியபோது, அது அவருக்கும் பெரும் பிரச்சனையாக மாறியது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவருடைய தாய் தெரிவித்தார்.

"அவன் துணிகளை மாற்றுகின்ற போதெல்லாம் அந்த வாலை உயர்த்தி, கவனமாக ஆடை அணிய வேண்டியிருந்தது.

அது அவனுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், கவலை அளிப்பதாகவும் இருந்ததை கண்டோம். எனவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்" என்று தாய் கூறினார்.

தண்டு வடத்தில் கோளாறு காரணமாக கருப்பையில் இருந்தபோதே இவருக்கு வால் முளைத்திருக்கலாம். ஆனால், அவன் வளர்ந்த பின்னர் அது வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Image caption 14-வது பிறந்த நாளுக்கு பின்னர் தான் இந்த வால் வளர தொடங்கியதாம்

"வால் மிகவும் நீளமாக வளர தொடங்கியபோது, அது பையனின் முதுகை அழுத்த தொடங்கியிருக்கிறது என்று அறுவை சிகிச்சை வல்லுநர் மருத்துவர் பிராமோட் கிரி தெரிவித்திருக்கிறார்.

"இது அழகியல் மற்றும் உளவியல் ரீதியாக அவனுக்கு மனச்சங்கடம் கொடுப்பதாக அமைந்து விட்டது" என்று அவர் கூறினார்.

இந்த வாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது சிக்கலான செயல்முறை இல்லை என்றாலும், இந்த வாலின் வளர்ச்சியானது, தண்டு வடத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியிருப்பதால், இந்த அறுவை சிகிச்சையை, நரம்பியல் அறுவை மருத்துவ வல்லுநர் தான் செய்ய வேண்டும்.

தண்டுவடத்தின் கீழ் பகுதி ஏதாவது ஒரு வகையில் தட்டையாகி முடிவடையும்போது, இது போன்ற வால் இயல்பாகவே வளரும் வாய்ப்பு இருக்கிறது.

மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு இந்த பதின்ம வயதினர் வால் இல்லாமல் வீட்டுக்கு செல்ல இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்