நாட்டை விட்டு வெளியேற பிரபல பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு தடை

பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே நடந்ததாக கூறப்படும் ஒரு மோதல் குறித்து தான் செய்தி வெளியிட்டதால், தனக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு முக்கிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தீவிரவாத குழுக்களுடன் ஐஎஸ்ஐக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டுகிறது இந்தியா

பாகிஸ்தானின் ''நாட்டை விட்டு வெளியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்டியலில்'' தனது பெயர் உள்ளதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக சிறில் அல்மெய்டா என்ற அந்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் தனது டிவிட்டர் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பட்டியல் பாகிஸ்தான அரசு வைத்திருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.

உள்நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தலைவர்களிடம் பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக எச்சரித்துள்ளளதாக வெளிவந்துள்ள அந்த கட்டுரையால், இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

இந்த செய்திக் கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அரசு , இக்கட்டுரை ''ஒரு ஜோடிக்கப்பட்ட கதை'' என்று மறுத்துள்ளது.

கடந்த பல வருடங்களில், இந்திய படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் 18 இந்திய படையினர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தாக்குதல் சம்பவத்துக்கு, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் சில தீவிரவாத குழுக்களே காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டிய மிகச் சில வாரங்களில் இந்த கட்டுரை வெளி வந்துள்ளதால், இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தாக்குதலில் தனக்கு தொடர்புள்ளதாக இந்தியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜிஹாதி குழுக்களான ஜெய்ஷ் -இ -முகமது மற்றும் லக்ஷ்கர் - இ - தொய்பா ஆகிய குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ் ஐ உளவு முகமை ஆதரவளிப்பதாக, நீண்ட காலமாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

சர்ச்சைக்குரிய செய்தி கட்டுரை

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதியன்று, பாகிஸ்தானின் ஆங்கில தினசரியான 'டான்' செய்தித்தாளில், அல்மெய்டா பதிவு செய்துள்ள கட்டுரையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் ஐஎஸ் ஐ உளவு முகமையின் தலைமை இயக்குனரான ரிஸ்வான் அக்தர் ஆகியோர் தலைமை வகித்த கூட்டத்தில் பங்குபெற்ற பெயரிடப்படாத சிலரை, தனது கட்டுரையில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு ஆதாரங்களாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் (கோப்புப் படம்)

பாகிஸ்தானின் உளவு முகமையுடன் உள்ள தொடர்புகளால், குறிப்பிட்ட சில தீவிரவாத குழுக்கள் மீது ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதது தொடர்பாக தங்களின் கவலையை பாகிஸ்தான் பிரதமர், பஞ்சாப் மாநில முதல்வர் மற்றும் சில அரசு அதிகாரிகள் ஆகியோர் அக்கூட்டத்தில் எழுப்பியதாக இந்த கட்டுரை தெரிவித்துள்ளது.

இதனால் சர்வதேச அரங்கில் தனிமைப்டுத்தப்படும் அபாயத்தை பாகிஸ்தான் சந்திப்பதாக அவர்கள் பாகிஸ்தான் ராணுவத் தலைவர்களிடம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த செய்தி கட்டுரையில் குறிப்பிட்டதை போல அக்கூட்டத்தில் எந்த மோதலும் நடைபெறவில்லையென பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் ஆகியோரின் அலுவலகங்கள், இந்த கட்டுரை குறித்து தங்களின் தீவிரமான மறுப்பினை வெளியிட்டுள்ளனர்.

தான் வெளியிட்ட செய்திக்கு தனது முழு ஆதரவினை தந்துள்ள டான் பத்திரிகை, மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் அம்சங்களின் உண்மைத்தன்மை குறித்து தாங்கள் பலமுறை உறுதி செய்ததாகவும், நாட்டில் மிகவும் மதிக்கப்படும் தங்களின் பத்திரிக்கையை பலியாடாக மாற்ற, ஒரு தீங்கிழைக்கும் பிரசாரத்தை அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

'வியப்பாகவும், வருத்தமளிப்பதாகவும் உள்ளது'

செவ்வாய்க்கிழமையன்று துபாய் செல்வதற்காக திட்டமிட்டிருந்த அல்மெய்டா, திங்கள் கிழமை மாலையில்தான், தனக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படும் என்ற தகவல் கிடைத்ததாக கூறினார்.

''கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் இந்த பட்டியலில் நான் உள்ளேன். இதனை நானும் பார்த்தேன். இதனால் நான் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டாம் என்று என்னிடம் கூறப்பட்டது'' என்று அல்மெய்டா டிவிட்டரில் தெரிவித்தார்.

''இது மிகவும் வியப்பாகவும், வருத்தமளிப்பதாகவும் உள்ளது. இங்கிருந்து வேறெங்கும் செல்ல எனக்கு எந்த எண்ணமும் இல்லை. பாகிஸ்தான் எனது தாய் நாடு'' என்று பின்னர் வேறொரு பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்