கர்நாடகம், தமிழகத்தில் ஆய்வை நிறைவு செய்தது காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு

தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் ஆய்வு மேற்கொண்ட காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும் என அக்குழுவின் தலைவர் ஜி.எஸ். ஷா தெரிவித்திருக்கிறார்.

Image caption தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை

காவிரி பாயும் பகுதிகளின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினர் நான்கு நாட்களாக கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கர்நாடக மாநிலத்திலும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தமிழ்நாட்டிலும் இந்தக் குழுவினர் ஆய்வு நடத்தினர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அவர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.

உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினர் இங்கு வந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென இந்தக் குழுவிடம் கோரினர். மொத்தம் 11 இடங்களில் இந்தக் குழுவினர் ஆய்வு நடத்தினர். விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் உயர்நிலை தொழில்நுட்பக் குழுவைச் சந்தித்து நிலைமையை விளக்கினார்.

மேட்டூர் அணையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்த அந்தக் குழுவினர், அணையின் நீர் இருப்பு குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர்.

இந்த உயர்நிலை தொழில்நுடப்க் குழுவின் தலைவரான மத்திய நீர் வாரியத்தின் தலைவர் ஜி.எஸ். ஷா, வாரியத்தின் உறுப்பினர் மசூத் ஹுசைன், வாரியத்தின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே. குப்தா ஆகியோரோடு, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.

நேற்று ஆய்வை முடித்த இந்தக் குழுவினரை தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ் செவ்வாய்க்கிழமை காலையில் சென்னையில் சந்தித்து விவாதித்தார்.

இதற்குப் பிறகு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.எஸ். ஷா, வரும் 17ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தங்களது அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்