சாத்தூர் அருகே ஓடும் பேருந்தில் ஒருவர் சுட்டுக்கொலை

Image caption பேருந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில்

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகில் ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட 22 வயதான இளைஞர் கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சுடப்பட்டதில் பேருந்திலேயே மரணமடைந்தார்.

அவரைத் துப்பாக்கியால் சுட்டவர்கள் படந்தல் சந்திப்புக்கு அருகில் பேருந்து சென்றபோது தப்பினர்.

காலை 11.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத இருவர் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவிக்கின்றனர்.

சுடப்பட்ட இளைஞருக்கும் வேறு சிலருக்கும் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதல் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை செய்துவருகிறது.

குற்றவாளிகளைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.