நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் - மு.க. ஸ்டாலின் திடீர் சந்திப்பு

நிதியமைச்சரும் முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளைக் கவனித்துவருபவருமான ஓ. பன்னீர்செல்வத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உடனிருந்தார்.

மு.க. ஸ்டாலினுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடன் சென்றனர்.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை குறித்து மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று விவசாய அமைப்புகளுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளின் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், காவிரிப் பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மு.க. ஸ்டாலின் பன்னீர்செல்வத்தை சந்தித்தபோது, விவசாயப் பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அவரிடம் அளித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், காவிரி பிரச்சனை தொடர்பாக விவாதிக்க சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும், எல்லாக் கட்சியின் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு தில்லி சென்று இந்தியப் பிரதமர் மோதியை சந்தித்து அழுத்தம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்தார்.

தீர்மானத்தின் பிரதிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் ஆகியோரிடமும் அளித்தனர்.

தங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்ததாக மு.க. ஸ்டாலின் கூறினார்.