சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக்கூடாது :பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை

லாபத்தில் இயங்கிவரும் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக்கூடாது என்றும் நிர்வாகத்துறை நிபுணர்களை நியமித்து, ரயில் பெட்டித் தொழிற்சாலையை அங்கே அமைக்க வேண்டுமென்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மோதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், சேலம் உருக்காலை என்பது தமிழகத்தின் மிகக் கடினமான முயற்சிகளின் மூலம் அமைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, சேலம் உருக்காலைக்கு அனுமதி அளிக்காவிட்டால் நான்காவது ஐந்தாண்டுத் திட்ட வரைவை ஏற்கப்போவதில்லை என தான் கூறியதையடுத்தே, நாடாளுமன்றத்தில் இந்தத் திட்டம் குறித்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்ததாக கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சேலம் உருக்கால, வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்போது அதனை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருப்பதாக வந்திருக்கும் செய்தி, தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

அதன் லாபம் ரூபாய் 100 கோடி என்ற உச்சத்தை அடைந்திருக்கும்போது, நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி மத்திய அரசு சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

அந்த ஆலையை தனியாருக்கு விற்பதற்குப் பதிலாக, நிர்வாகத்துறை நிபுணர்களை நியமித்து, மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, ரயில் பெட்டி தொழிற்சாலையை அங்கே ஏற்படுத்த வேண்டுமென கருணாநிதி கூறியிருக்கிறார்.

சேலம் உருக்காலையுடன் தமிழக மக்கள் உணர்வுரீதியாக பிணைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை தனியார்மயமாக்கினால் பெரும் ஏமாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் தலையிட்டு தமிழகத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான உருக்காலையை அரசே நடத்த வேண்டுமென்று கருணாநிதி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.