ஜெயலலிதா குறித்து வதந்தி; மேலும் ஒருவர் கைது

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இணைய குற்றத் தடுப்பு காவல்துறை கைதுசெய்துள்ளது.

Image caption அவதூறு பரப்பியதாக ஏழு பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜேசுராஜ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வரின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக இணைய குற்றத் தடுப்பு காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.

ஏற்கெனவே முதல்வரின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

தி.மு.க.வினர் குறிவைக்கப்படுகிறார்களா?

இதற்கிடையில், தி.மு.கவைச் சேர்ந்தவர்களை குறிவைத்து தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு செயல்படுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் சட்டத் துறை சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்கும் தி.மு.கவினர் சைபர் கிரைம் காவல் துறையினரால் மிரட்டப்படுவதாகவும் அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படுவதாகவும் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு அச்சுறுத்தப்படுவதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் கண்டனம்

முதலமைச்சரின் உடல்நிலை குறித்துப் பேசினாலே, கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் இருவர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், அந்த ஊழியர்கள் இருவரும் தங்கள் செல்போனில் வந்த தகவல் குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், அங்குவ ந்த அ.தி.மு.க. நிர்வாகி அதனைக் கேட்டு புகார் அளித்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வரின் உடல்நலம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென மக்கள் நினைப்பதும் அது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும் இயல்புதான் எனக் கூறியிருக்கும் ராமதாஸ், வங்கியில் பேசிக் கொண்டிருப்பவர்கள், தெருமுனையில் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுப்பது ஜனநாயகப் படுகொலைக்கு வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறார்.