காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள்,அனைத்து எதிர்க்கட்சியினர் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் திங்கள் காலை 6 மணி தொடங்கி 48 நேர ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Image caption திருச்சி பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையத்தில் நாகூர் பாசஞ்சர் ரயிலை மறித்து அதன் ஏஞ்சின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

இதற்கு திராவிட முன்னேற்ற கழகம் (திமுக), முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக), காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக), மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து, நூற்றுக்கணக்கான இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடிய பெருங்கூட்டத்தால் பரபரப்பு நிலவிய நிலையில் மு.க.ஸ்டாலினும், திமுக-வினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image caption சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது

சென்னையில் உள்ள பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசு சார்பில் அக்டோபர் 3 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற வரம்புக்கு உட்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது.

Image caption தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் போராட்டம்

மேலும், ஏற்கெனவே இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது.

மத்திய அரசின் வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், மேலாண்மை வாரியம் அமைக்க தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் ரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

Image caption தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி குடமுருட்டி ரயில் நிலையம் அருகில் மறியல்

அடுத்த விசாரணை, அக்டோபர் 18 ஆம் தேதி, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக, மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் குழுவைக் கொண்டு இரு மாநிலங்களிலும் கள ஆய்வு நடத்தி, 17 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்