தமிழகத்துக்கு தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வழங்க உச்சநீதிமன்றம் ஆணை

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினசரி 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை இதுதொடர வேண்டும் என்றும் கர்நாடக மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Image caption இந்திய உச்சநீதிமன்றம்

காவிரி தொடர்பான பல்வேறு மேல்முறையீட்டு வழக்குகளும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் கள ஆய்வு அறிக்கை குறித்தும் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த வாரம் ஆய்வு நடத்திய தொழில்நுட்பக்குழு, இரு மாநிலங்களிலும் உள்ள கள நிலவரம் குறித்த தனது அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. இரு மாநிலங்களிலும் உள்ள தண்ணீர் பற்றாக்குறை, பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் உள்ளிட்ட அம்சங்களை விவரித்துள்ளது. ஆனால், குறிப்பான பரிந்துரை எதையும் அளிக்கவில்லை.

இந் நிலையில், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று அந்த வழக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஏற்கெனவே, அக்டோபர் 7 முதல் 18-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு தினசரி 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை அதைத் தொடர வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகாரம் உண்டா?

அதே நேரத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமா, அதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரம் உண்டா என்பதில் முக்கியப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நடுவர் மன்றம் உத்தரவிட்ட பிறகு, அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றும், அத்தகைய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரவரம்பு இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால், எந்த உத்தரவாக இருந்தாலும் அதுபற்றிய மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கர்நாடக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

எனவே, மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. விசாரணை புதன்கிழமையும் தொடரும்.

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி உத்தரவில், தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஜூன் 1 முதல் மே 31 வரையிலான தண்ணீர் ஆண்டில் சராசரியாக 740 டிஎம்சி தண்ணீர் காவிரி நீர்ப்பிடிப்புப் படுகைகளில் கிடைக்குமானால், அது சராசரி மழையளவு உள்ள ஆண்டாகக் கருதப்பட வேண்டும். இல்லாவிட்டால், நான்கு மாநிலங்களும் பற்றாக்குறையை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை உள்பட அனைத்து மாநிலங்களுமே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.