ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமையன்று காலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக அமைச்சரவையில் உள்ள 32 அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

படத்தின் காப்புரிமை Tngovt
Image caption தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜெயலலிதா இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கர்நாடக அரசு மறுத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்கள், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இருந்தபோதும், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூர்வமாக அரசு எதையும் தெரிவிக்கவில்லை.

2016 மே மாதம் புதிய அரசு பதவியேற்ற பிறகு நடக்கும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பாக ஜூலை 6ஆம் தேதியன்று ஜெயலலிதா தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரது கவனித்துவந்த அமைச்சரவைப் பொறுப்புகள், நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டன. அமைச்சரவைக் கூட்டங்களையும் அவரை தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.