காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியுமா? உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இதுதொடர்பான விசாரணையை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று நிறைவு செய்தது.

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில், சராசரியாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஆண்டுக்கு 730 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்போது, ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தது. அதன்படி, ஜூன் 1 முதல் மே 31-ஆம் தேதி வரையிலான ஒவ்வொரு தண்ணீர் ஆண்டும், தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். பற்றாக்குறை ஆண்டில் அதற்கு ஏற்றபடி பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மேல் முறையீடு செய்தன. இவ்வளவு ஆண்டுகளாக அவை விசாரிக்கப்படவில்லை. இந் நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் தேவை தொடர்பாக தமிழக அரசு புதிதாக மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்து கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

அந்தக் குழுவும் அறிக்கை அளித்துவிட்டது. இதை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு தினசரி 2 ஆயிரம் கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந் நிலையில், நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீடு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதத்தை முன்வைத்துள்ளது. அதுகுறித்து, இன்று விசாரணை நடைபெற்றது.

அரசியல் சட்டத்தின் 262-ஆவது பிரிவின்படி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அதுபற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்கள் இறுதித் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய அதிகாரம் உள்ளதாகவும், அதை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியும் என்றும் வாதிட்டன. புதுச்சேரி மட்டும் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்தது.

அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு, மேல்முறையீட்டை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக முடிவெடுக்கப்பட்டால், மாநிலங்களின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்