இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தஞ்சாவூரில் எம். ரெங்கசாமியும், அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே. போஸும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நெல்லித்தோப்புத் தொகுதியில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுவார் என அ.தி.மு.கவின் தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே 16ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நிறுத்தப்பட்டன.

பெரும் அளவில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகளின் காரணமாகவே இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில், அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பெரும் தொகையான பணம் கைப்பற்றப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதையடுத்து இந்த இரு தொகுதிகளுக்குமான தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம். சீனிவேல் வெற்றிபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தன்றே அவர் உயிரிழந்தார். இதனால் அந்தத் தொகுதியும் காலியாக இருந்தது.

இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல்கள் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தஞ்சாவூரிலும் அரவக்குறிச்சியிலும் அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே இப்போதும் போட்டியிடுகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அ.தி.மு.க. தெரிவித்திருக்கிறது.