தகவல்களைப் பரிமாறுகிறார் ஜெயலலிதா; உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம்

உடல்நலமின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் படிப்படியாக மேம்பட்டுவருவதாகவும், அவரால் தகவல்களைப் பரிமாற முடிவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption படிப்படியாக மேம்படுகிறது உடல்நிலை

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுவதாகவும், அவரது உடல் நலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருவதோடு, இயன்முறை மருத்துவமும் அளிக்கப்படுவதாக மருத்துவமனையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஜெயலலிதாவுக்கு மூத்த இருதய நோய் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தொற்றுநோய்த் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் ஆகியோர் சிகிச்சையளித்துவருவதாகவும் அவருக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்தை மூத்த ஊட்டச்சத்து நிபுணர்கள் கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவை பிரிவு இயக்குனர் என். சத்தியபாமா கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இயன்முறை மருத்துவமும் அளிக்கப்படுகிறது

ஜெயலலிதாவால் தற்போது தகவல்களைப் பரிமாற முடிவதாகவும் படிப்படியாக அவரது உடல்நலம் மேம்பட்டுவருவதாகவும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை கூறியது.

அதற்குப் பிறகு, அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த பத்து நாட்களில் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வெளிவரும் முதல் அறிக்கை இதுவாகும்.

தொடர்புடைய தலைப்புகள்