விஷ்ணுப்ரியா மரணம்: சிபிஐ விசாரணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் பெண் போலீஸ் அதிகாரி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதன் மூலம், சிபிஐ விசாரணையை உறுதிப்படுத்தியுள்ளது.

விஷ்ணுப்ரியா கடந்த 2015-ம் ஆண்டு திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

நீதிபதி மதன் லோகுர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வின் முன்பு இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி, விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பாாக சிபிசிஐடி விசாரணை நடத்தி முடித்திருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், அதன் முடிவுகளையும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் ஏற்கெனவே 2 - 3 முறை தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், மனநிலை ஸ்திரமில்லாதவர் என்றும் விசாரணை முடிவகள் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, சிபிஐ விசாரணை நடத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.