சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : மு.க. ஸ்டாலின்

அரசியல் சாசனப்படி தமிழக சட்டப்பேரவையில் அமைக்க வேண்டிய குழுக்களை அமைக்காவிட்டால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 25-ஆம் தேதி திமுகவின் முயற்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நகலை, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்குவதற்காக இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

நிதியமைச்சர் இல்லாத காரணத்தால் அவரது செயலரிடமும், தலைமைச் செயலரிடமும் தீர்மானங்களின் நகலை மு.க. ஸ்டாலின் அளித்தார்.

ஒவ்வொரு சட்டப்பேரவையிலும் அமைக்கவேண்டிய மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, நிறுவனங்கள் குழு, பேரவை உரிமைக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லையென குற்றம்சாட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் இது குறித்து திமுக கேள்வியெழுப்பியபோது, அந்தக் குழுக்கள் அமைக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்ததாகவும், ஆனால், அதனை இதுவரை செய்யவில்லையென்றும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக நினைவூட்டல் கடிதத்தை சபாநாயகரிடம் அளிக்க வந்ததாக கூறிய ஸ்டாலின், இதனை விரைவாகச் செய்யாவிட்டால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என்றும் ஆளுனரிடம் முறையிடுவோம் என்றும் கூறினார்.

மு.க. ஸ்டாலின் வந்தபோது சபாநாயகர் அவையில் இல்லாததால், நினைவூட்டல் கடிதத்தை பேரவைச் செயலரிடம் ஸ்டாலின் கொடுத்தார்.