கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிலைகள் சென்னையில் மீட்பு: பேராசிரியர் உள்பட மூவர் கைது

சென்னையில் ஏற்றுமதி செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பழங்காலச் சிலைகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை மீட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Image caption மீட்கப்பட்ட சிலை

வளசரவாக்கம், தியாகராய நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒன்றில் பழங்காலத்தைச் சேர்ந்த கற்சிலைகள், உலோகச் சிலைகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவை தொல்லியல் துறையின் போலியான சான்றிதழ்களோடு ஏற்றுமதி செய்யவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாகக் கிடைத்த தகவல்களையடுத்து, இந்த வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர், இந்த வீடுகளில் இருந்து அமர்ந்த நிலையில் உள்ள கல்லால் ஆன புத்தர் சிலை, நின்ற நிலையில் மகாவிஷ்ணுவின் சிலை, கல் தூண், கல்லால் ஆன நந்தி உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிலைகளைக் கைப்பற்றினர்.

Image caption மீட்கப்பட்ட சிலை

இந்த வீடுகள் பாலாஜி மற்றும் ஸ்ரீகாந்த் ஓம்கா ராம் ஆகியோருக்குச் சொந்தமானவை. இது தொடர்பாக, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புதுதில்லியைச் சேர்ந்த உதித் ஜெயின் என்பவரது உதவியுடன் போலியான சான்றிதழ்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தவை என்பது தெரியவந்தது.

இதே போன்ற சிலை கடத்தல் தொடர்பாக, கடந்த ஜூன் மாதத்தில் கைதுசெய்யப்பட்ட தீனதயாளன் என்பவருக்காகவே, இவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்திருக்கிறது.

இதையடுத்து, பாலாஜி, ஸ்ரீகாந்த் ஓம்காராம் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பாலாஜி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ஸ்ரீகாந்த் ஓம்காராம், தீனதயாளனின் உறவினராவார்.

போலிச் சான்றிதழ்களைப் பெற இவர்களுக்கு உதவிய உதித் ஜெயின் மும்பையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் சென்னையிலும், மும்பையிலும் மேற்கொண்டதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்திருக்கிறது.