தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவக்கம்

தமிழ்நாட்டிற்கு பெருமளவில் மழைப்பொழிவை அளிக்கும் வடகிழக்குப் பருவமழை துவங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இந்த ஆண்டு, இயல்பான அளவை விட குறைவாகவே மழை பெய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி வாக்கில் வடகிழக்குப் பருவமழை துவங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் பருவமழை துவங்குவது தாமதமானது.

ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி ஏற்பட்ட கியான்ட் புயலாலும், தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்ற வீச ஆரம்பித்திருப்பதால் தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டு, இயல்பான அளவோ, அதைவிட பத்து சதவீதம் குறைவான அளவிலோதான் மழைபெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் திருவாரூரில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழையும் தொழுதூர், பெரம்பலூர், வலங்கைமான் ஆகிய இடங்களில் 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

வரும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் எனக் கருதப்படும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒட்டுமொத்தமாக 440 மில்லி மீட்டர் மழை பெய்வது வழக்கம். 2015-ஆம் ஆண்டில் 53 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 673.3 மில்லி மீட்டர் மழை பெய்தது.

Image caption கடந்த ஆண்டு சென்னையில் அதிகளவில் மழை பெய்தது

சென்னையில் வழக்கமாகப் பெய்யும் 789.9 மில்லி மீட்டர் மழைக்குப் பதிலாக கடந்த ஆண்டில், 104 சதவீதம் அதிகம் பெய்து, 1608.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால், கடந்த டிசம்பர் 2-3 ஆகிய தேதிகளில் சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்