மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் விவகாரம்: திருமாவளவன் விளக்கம்

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லையென்றும் அக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Image caption திருமாவளவன்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து மக்கள் நலக் கூட்டமைப்பை உருவாக்கினர். அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இடம்பெற்றார். இந்தக் கூட்டமைப்பு மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டது.

சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணி தோல்வியடைந்தாலும் கூட்டமைப்பு தொடரும் என அதில் இருந்த தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், இன்று சில தொலைக்காட்சிகளில், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் பிபிசியிடம் பேசிய விடுதலைச் சிறுதைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது, தேசிய அளவில் இம்மாதிரி ஒருங்கிணைப்பாளர் என்பதைத் தாங்கள் ஏற்கவில்லையென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. ஆனால், நான்கு கட்சிகளும் இணைந்து அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இன்று ஏன் இம்மாதிரி ஒரு செய்தி வெளியானது எனத் தெரியவில்லை" என்று கூறினார்.

அதேபோல நடக்கவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சி மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்ததாக திருமாவளவன் கூறினார்.

கூட்டணிக்குள் வைகோ எந்தக் கருத்தையும் திணிப்பதில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.

முன்னதாக பிபிசியிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், வைகோவே கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்கிறார் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சியும் மதிமுகவும் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.