ஆடுகளை விற்றுக் கழிப்பறை கட்டி, தூய்மை இந்தியா திட்டத்துக்கு முன்னுதாரணமான மூதாட்டி

செவ்வாயன்று, மத்திய இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தாம்தாரி மாவட்டம் பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் முழுவதும் ஒழிக்கப்பட்ட முதல் சத்திஸ்கார் மாநில மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முழு பெருமையும், தனக்கு 105 வயது என்று சொல்லும், குன்வர் பாய் யாதவ் என்ற மூதாட்டிக்கே தரப்படுகிறது.

குன்வர்பாய் தனது வீட்டில் கழிப்பறை கட்டுவதற்காக, தனது ஒரே சொத்தான சில ஆடுகளை விற்றாராம்.

பிபிசியின் கீதா பாண்டே அவரது எழுச்சியூட்டும் கதை கேட்பதற்காக அவரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

Image caption தனது இல்லத்தில் கழிவறை காட்டியதற்காக மிக பிரபலமாகியுள்ள குன்வர் பாய் யாதவ்

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டாபாரி என்ற கிராமத்தில் வாழும் 18 குடும்பங்கள், 1970களின் பின்பகுதியில், மகாநதி ஆற்றில் அணை கட்டப்பட்டபோது, இடம்பெயர்ந்து இங்கு குடியமர்த்தப்பட்டன.

ஒரு புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாத, குறிப்பிடத்தக்க அம்சம் ஏதும் இல்லாத இந்தக் குக்கிராமத்தில், அதன் மிக வயதான நபரான, குன்வர் பாயும் புரட்சி செய்யக்கூடிய ஒரு நபராகத் தோற்றமளிக்கவில்லை.

ஆனால், கடந்த ஆண்டில் திருமதி.யாதவ், சத்தீஸ்கர் மாநிலம் பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் முழுவதும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக மாறும் பயணத்தில் தனது பெயரையும், தனது கிரமத்தில் பெயரையும் கொட்டை எழுத்துக்களில் பொறித்தார்.

Image caption கழிவறை கட்ட குன்வர்பாய் 22,000 ரூபாய் செலவு செய்துள்ளார்

பிரதமர் தலை வணங்கினார்

இன்று உள்ளூரில் ஒரு பிரபலமான நபராகவும் மிகவும் வேண்டப்படும் நபராகவும் உள்ள இவரை, கிராமவாசிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள், தங்களது மாநிலத்தில் பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் முழுவதும் ஒழிக்கப்படும் பிரச்சாரத்திற்கு அடையாளமான நபர் என்று விவரிக்கின்றார்.

இந்த ஆண்டு முன்னதாக அங்கு வந்த, பிரதமர் நரேந்திர மோதி, பணிந்து, அவரது பணிக்காக தனது பாராட்டைத் தெரிவிக்கும் விதமாக அவரது கால்களை தொட்டு வணங்கினார்.

செவ்வாயன்று, மோதி, தாம்தாரி மாவட்டம் பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் முழுவதும் ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் என்று அறிவிக்க சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வரவுள்ளார்.

எவ்வாறு, 8 லட்சம் மக்களைக் கொண்ட தாம்தாரி மாவட்டம் இந்த இலக்கை எட்டியது ?

இந்தக் கேள்வியை இந்த மாவட்டத்தில் உள்ள யாரை கேட்டாலும், அவர்கள் திருமதி.யாதவை சுட்டிக்காட்டுவார்கள்.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption தனக்கு 105 வயதாகிறது என்கிறார் குன்வர் பாய் யாதவ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மோதி அரசாங்கம் ''ஸ்வச் பாரத் அபியான்'' (தூய்மை இந்தியா) என்ற திட்டத்தை- மகாத்மா காந்தியின் 150 பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி 2019ல், நாடு முழுவதும், பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் ஒழிக்கப்படும் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற முயற்சியில் - தொடங்கியது.

இந்தியாவில் 550 மில்லியன் மக்கள், இந்திய மக்கள் தொகையில் பாதியளவு மக்கள் பொது வெளியில் மலம் கழிக்கின்றனர் என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இந்தியாவை வெட்கப்பட வைத்தது.

கழிப்பறைகளை விட மொபைல் போன்கள் பெற்றுள்ள மக்கள் அதிகம் உள்ளனர் என்ற உண்மை, தவறான முன்னுரிமைகள் பற்றி கேலியாகப் பேச்சுக்களை தூண்டியது.

கழிவறைகள் கட்டுவதற்கு மக்களை ஊக்குவிக்க, ஒரு பெரிய அளவிலான பிரசாரத்தை அரசு தொடங்கியது. மற்றும் அரசு அதிகாரிகள் மிக தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்தால் என்ன பயன்கள் என்று மக்கள் தெரிவிக்க அனுப்பப்பட்டனர்.

இதன் மூலமாகத் தான், கடந்த ஒரு நூற்றாண்டாக மலம் கழிக்க அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று வந்த யாதவ், கடந்த ஆண்டு முதல் முறையாகக் கழிவறை பற்றிக் கேள்விப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Press Trust of India
Image caption மூதாட்டிக்கு தலை வணங்கிய மோதி

''உள்ளூரில் உள்ள பள்ளியில் பேசுவதற்காக மாவட்ட ஆட்சியர் வந்திருந்தார். நானும் அங்கு சென்றிருந்தேன். அவர் கழிவறைகள் கட்டுவது பற்றி பேசுவதைக் கேட்டேன். அது வரை எனக்குக் கழிவறை குறித்து எந்த எண்ணமும் இல்லை. மற்றும் அதைப் பற்றி தான் யோசித்தும் இல்லை, ''என்றார் திருமதி.யாதவ். ''ஆனால், அவர் பேசியவை என்னை யோசிக்க வைத்தது. அது ஒரு நல்ல செயலாகவும் இருந்தது,'' என்றார்.

திருமதி.யாதவ் எந்த முறையான கல்வியையும் பயிலவில்லை. மற்றும் அவருடைய பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தால், அவர் தான் 105 வயதானவர் என்று சொல்லுவதை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றதாக உள்ளது.

முதுமையிலும் முன்னுதாரணமான குன்வர்பாய்

ஆனால், கோடுகளும் சுருக்கங்களும் நிறைந்த அவரது முகம், கூனிக் குறுகிய உடல் மற்றும் மங்கிவரும் பார்வை ஆகியவை அவர் பல ஆண்டுகள் வாழ்ந்ததற்கான சான்றாக உள்ளன.

Image caption குன்வர் பாய் யாதவ் கழிவறை கட்டுவதற்கான பணத்தை சேர்க்க தனது ஏழு ஆடுகளை விற்றார்

சமீப ஆண்டுகளில், தினமும் குளிப்பதற்காகவும், மலம் கழிக்கவும் காட்டுப் பகுதிக்குள் செல்வது அவருக்கு மிகச் சிரமமானதாக இருந்ததாகவும், இரண்டு முறை கீழே விழுந்துவிட்டதகவும், காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

''எனது வீட்டில் கழிவறை காட்டினால் அது பெரிய சிரமத்தில் இருந்து காப்பாற்றும் என்று எண்ணினேன்,'' என்றார்.

''ஆனால் என்னிடம் பணம் இல்லை. கழிவறை கட்டுவதற்கு எவ்வாறு பணம் சேர்க்கப்போகிறேன் என்று யோசித்தேன். எனது 20-25 ஆடுகள் தான் எனது சொத்து. அதில் ஏழு ஆடுகளை நான் விற்றேன். அதில் 18,000 ரூபாய் கிடைத்தது. ஆனாலும் என்னிடம் பணம் குறைவாக இருந்தது. கூலி வேலை செய்யும் எனது மருமகளும் சிறிது பணம் கொடுத்ததும், எங்களால் ஒரு கழிவறை கட்டுவதற்கான பணத்தை சேர்க்கமுடிந்தது,'' என்று அவர் விளக்கினார்.

Image caption தூய்மை இந்தியா திட்டத்திற்கு திருமதி.யாதவ் செய்த பங்களிப்பைப் பாராட்டி சுவற்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது

நான்கு தொழிலாளர்கள், 15 நாட்களாக வேலை செய்து இந்தக் கழிவறையை 22,000 ரூபாய் செலவில் கட்டிமுடித்தனர்.

குன்வர் பாயால் பரவிய உற்சாகம்

இந்தக் கிராமத்தில் இவரது கழிவறை தான் முதல் கழிவறை. கட்டிமுடித்த சிறிது காலத்தில், அருகில் வசிக்கும் பலரும் இது குறித்து பேசத் தொடங்கினர்.

கழிவறையை வந்து பார்த்துச் சென்றனர். சில வாரங்களில், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் வந்து பார்வையிட்டனர்.

பலரும் தங்களது வீடுகளில் கழிவறை கட்டத் தொடங்கினர்.

ஒரு ஆண்டுக்குள், இந்தக் கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை கட்டப்பட்டுவிட்டது.

படத்தின் காப்புரிமை AP
Image caption குன்வர் பாய் யாதவ் தனது அண்டை வீட்டார்களை விடவும் மிகவும் ஏழ்மையானவர்

முதலில், பல கிராமவாசிகள், பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இருந்ததால், கழிவறை கட்ட விருப்பம் இல்லாமல் இருந்தனர்,'' என்றார் வத்சலா யாதவ். இவர் கோட்டபாரி மற்றும் பராரி கிரமங்களின் கவுன்சில் தலைவர்.

குன்வர் பாய் இந்த விஷயத்தைத் தொடங்கினார். இந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். பராரி கிராமத்தில் கடந்த ஆண்டு வரை, 338 வீடுகளில் வெறும் 60 வீடுகளில் தான் கழிவறைகள் இருந்தன.

இந்த மாற்றம் அந்தக் கிராமத்திலும் பரவியது. தற்போது, ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை கட்டப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

''முன்னதாக, மக்கள், 'நாங்கள் ஏழைகள். நாங்கள் எப்படி கழிவறை கட்டுவது'' என்று கூறுவார்கள்,'' என்கிறார் வத்சலாவின் கணவரும் காப்பீட்டு முகவரான ஜோகன் சிங்க் யாதவ்.

''ஆனால் குன்வர் பாய் இதற்கு முடிவு கட்டிவிட்டார். இங்குள்ள பலரை விடவும் இவர் ஏழ்மையானவர். இவரால் முடிந்தால், நம்மாலும் முடியும் என்று தற்போது மக்கள் கூறுகின்றனர். குன்வர் பாய் ஒரு தீர்வை வழங்கிவிட்டார்,'' என்றார்.

Image caption திருமதி.யாதவ் தனது குடும்பத்தினருடன்

திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்களின் எண்ணத்தை மாற்ற வேலை செய்து வரும் தாம்தாரி மாவட்ட ஆட்சியர் பிரசன்னா, ''கழிவறை கட்டுவதாலேயே அவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள் என்பது உறுதியில்லை. அவர்களைப் பயன்படுத்த வைப்பது ஒரு பெரிய சவால்,'' என்கிறார்.

''மக்கள் பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறார். நான் கழிவறைகளை கட்டலாம். அது எளிதான ஒன்று தான். ஆனால் மக்களின் எண்ணத்தை மாற்றுவது மிகவும் சிரமமானது,'' என்றார்.

Image caption தனது வீட்டில் கழிவறை கட்டியதற்காக, திருமதி.யாதவுக்கு அளிக்கப்பட்ட பதக்கம்

இந்தப் பிரச்சனையை சமாளிக்க அதிகாரிகள் ''பசுமைப் படைகளை'' நியமித்துள்ளார். அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டுள்ள இந்தக் குழுக்கள், கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்களா என சோதனை செய்வார்கள்.

தூய்மை இந்தியாவின் விளம்பர முகம் குன்வர் பாய்

சுகாதாரம் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க தெரு நாடகங்கள் நடத்தப்படுகின்றன மற்றும் குன்வர் பாய் யாதவ் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இது மற்றவர்களையும் அவரை பின்பற்றச் செய்யும்.

Image caption திருமதி.யாதவின் கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது

திருமதி.யாதவ் தனது முழு வாழ்க்கையைக் கிராமத்தில்தான் கழித்துள்ளார் . அவர் கிராமத்திற்கு வெளியில் கடந்த ஆண்டு பிரதமரை சந்திக்க அழைக்கப்படும் வரை, அவர் வந்ததில்லை. அவர் தனது புதிய பிரபல அந்தஸ்திற்கு தற்போது தான் பழக்கமாகி வருகிறார்.

Image caption குன்வர் பாயைப் பின்பற்றி பலரும் கழிவறைகளை தங்களது வீடுகளில் காட்டியுள்ளனர் என்கிறார் கிராம கவுன்சில் தலைவர் வத்சலா யாதவ்

''எனது வாழ்நாள் முழுவதும், நான் தினமும் ஆடு மேய்ப்பதற்கும் அல்லது தின கூலியாக வேலை செய்வதற்கும் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறேன். எனக்குப் பிறந்த 12 குழந்தைகளில் பலர் இள வயதிலே இறந்துவிட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அவர்களில் எட்டு பேர் மற்றும் எனது கணவரும் இறந்துவிட்டனர். ஏழ்மை என்னை முடக்கியது. பசியுடன் வாழ நாங்கள் போராடிவருகிறோம்,'' என்றார். ''நான் மிகப் பிரபலமாக ஆவேன் என்று நான் எப்போதும் நினைத்து கிடையாது,'' என்றார்.

Image caption தற்போது தாம்தாரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்

'' இந்தப் புகழுக்கு உரியவர் இவர்,'' என்றார் ஆட்சியர் பிரசன்னா.

''அவர் இந்த மாநில மக்களுக்கே உத்வேகமாக விளங்கியுள்ளார். மற்றும் பிரதமரே அவரிடம் தலை தாழ்த்தி வணங்கியுள்ளதால் இவர் சத்தீஷஸ்கார் மாநிலத்தில் பிரபலமான நபராகிவிட்டார்,'' என்றார் பிரசன்னா.

தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பர முகம் இவர்,'' என்றார் அவர்.