போபால் சிறையிலிருந்து கைதிகள் தப்பியபின் கொல்லப்பட்ட விவகாரம் எழுப்பும் கேள்விகள்

கடந்த ஞாயிறன்று இரவு, போபால் சிறையிலிருந்து, சிறைக் காவலர் ஒருவரைக் கொன்றுவிட்டு, தப்பியோடிய , சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 8 பேர் காவல் துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பிபிசி இந்திப் பிரிவின் வினீத் காரே அனுப்பியுள்ள குறிப்பு

படத்தின் காப்புரிமை RAJEEV GUPTA
Image caption சிறைக்கைதிகள் தப்பிய சம்பவமும், பின்னர் கொலைச் சம்பமும் எழுப்பும் பதில் வராத கேள்விகள்

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்த இந்த சம்பவம் போல ``என்கவுண்டர்`` கொலைகள் இந்திய போலிஸ் வரலாற்றில் கடந்த காலங்களிலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவங்கள் நடந்த போதெல்லாம், போலிஸ் நடவடிக்கைளைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

நாட்டில், 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், போலிஸுக்கு எதிராக 206 `என்கவுண்டர்` கொலைகள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டன என்று தேசிய மனித உரிமை ஆணையம் தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில், கூறியிருக்கிறது.

போபால் மத்திய சிறை இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான சிறைகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.

இச்சிறையில் சிமி இயக்கத்தை சேர்ந்த மற்றும் இடது சாரி நக்ஸல் விசாரணைக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

கேள்விகள், கேள்விகள் ....

’’இந்தியாவின் முதல் ஐ.எஸ்.ஓ அத்தாட்சிப் பத்திரம் பெற்ற சிறைக்கூடம்‘’ என்று தனது இணைய தளத்தில் கூறிக்கொள்ளும் சிறையில் இது போன்ற ஒரு சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

திங்கட்கிழமை அதிகாலை 2 மணி்யிலி்ருந்து 3 மணிக்குள் இந்த சிறைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பியதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில் பதில் கிடைக்காத பல கேள்விகள் இருக்கின்றன.

1. சிறையில் 40 பாதுகாப்புக் கேமராக்கள் இருந்தும், இந்த சிறைக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த அறையைச் சுற்றியிருந்த நான்கு கேமராக்கள் , சம்பவம் நடந்த போது வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

2. கைதிகள் சிறைக்கதவின் பூட்டுகளை எப்படி உடைக்க முடிந்தது ? மரத்துண்டுகள் மற்றும் பல் துலக்கும் பிரஷ் போன்றவற்றைக் கொண்டு அவர்கள் சாவிகளை செய்து கொண்டார்கள் என்று போலிஸ் கூறுகிறது.

3.இந்தக் கைதிகளில் மூன்று பேர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் காண்ட்வா சிறையிலிருந்தும் தப்பியவர்கள். அந்த நிலையில், ஏன் சிறைத்துறையினர், சரியான பாடங்கள் படிக்கவில்லை ? ( கேட்பது எதிர்க்கட்சிகள்)

4. ஏன் எல்லா அபாயகரமான சிறைக்கைதிகளும் ஒரே சிறையில் வைக்கப்பட்டனர் ?

5. சம்பவம் நடந்த அன்று இரவு இந்த கைதிகளின் அறை அருகே ஏன் இரண்டு காவலர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தனர் என்று கேட்கிறார் கொலைசெய்யப்பட்ட காவலர் ராமாஷங்கர் யாதவின் மகள், சோனியா.

6. கைதிகள்,தங்கள் படுக்கை விரிப்புகளை இணைத்துக் கட்டி , 30 - 35 அடி உயரமுள்ள சிறைச் சுவர்கள் மீ்து ஏறி தப்பினர் என்று போலிஸ் கூறுவதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

ஏன் தப்பிய கைதிகள் வெகு தூரம் செல்லவில்லை ?

7. கைதிகள் சிறையிலிருந்து வெளியே தப்பிவந்த பின் போபாலின் அருகே கொல்லப்படும் வரையிலான சுமார் 9 மணி நேரங்களில் அவர்கள் ரெயிலிலோ அல்லது பேருந்திலோ தப்பி மாநில எல்லையை விட்டே கடந்திருக்க முடியும் . ஏன் அவர்கள் அப்படி செய்யவில்லை ?

8. கொல்லப்பட்ட நிலையில் கைதிகளைக் காட்டும் படங்களில், அவர்கள் சிறை உடை அணியாமல் இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண உடையில் இருப்பது, கையில் கைக்கடிகாரங்கள் அணிந்திருப்பது, ஷூக்களை மற்றும் கைப்பட்டைகள் அணிந்தி்ருப்பது ஆகியவை குறித்து கேள்விகளை எழுப்புகிறார் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹதுல் முஸ்லீமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவாய்சி.

கைதிகளிடம் ஆயுதங்கள் இருந்தனவா ?

9. கைதிகள் கொல்லப்பட்ட சுமார் 9 மணி நேரங்களுக்குப் பின், மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் , சிமி இயக்கத்தினரிடம் துப்பாக்கிகள் இல்லை என்றும், ஆனால் அவர்கள் தப்பிச் செல்லும்போது ஜெயில் பாத்திரங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்கள் என்றும், அவர்கள் அபாயகரமான பயங்கரவாதிகள் என்றும் என்.டி.டிவியிடம் கூறினார். ஆனால் பின்னர் மாலையில், பேசிய மூத்த போலிஸ் அதிகாி யோகேஷ் சௌத்ரி, அக்கைதிகளிடமிருந்து, நான்கு துப்பாக்கிளும் , மூன்று கூர்மையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்றார். காவல் துறையினர் மீது கைதிகள் சுட்டனர் என்றும் ,திரும்பவும் போலிசார் சுட்டதில் அந்த 8 பேரும் கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன.

10. போலிஸ் தரப்பு கூற்றை நம்புவதாக வைத்துக் கொண்டால், துப்பாக்கிகள் எப்படி கைதிகளுக்குக் கிடைத்தன என்று கேள்வி எழுகிறது . தாங்கள் இது குறித்து விசாரித்து வருவாக காவல் துறையினர் கூறுகிறார்கள்.

11. கைதிகள் கொல்லப்படும் முன்னரும், கொல்லப்பட்ட பின்பும் நடந்தவற்றைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பரவின. ஒரு வீடியோவில், போலிஸ் அதிகாரி ஒருவர் எதையோ நோக்கிச் சுடுவதுக் காண்பிக்கப்படுகிறது. இந்த வீடியோக்கள் எல்லாம் சரிபார்க்கப்படாதவை என்றும், தாங்கள் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலிஸ் கூறுகிறது.