நீண்ட தாமதத்துக்கு பிறகு தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் கட்டடம்

சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் அபாயகரமான நிலையில் உள்ள 11 மாடி கட்டடம் இன்று மாலை 6.30 மணியளவில் தகர்க்கப்பட்டது.

Image caption 61 பேரை பலிவாங்கிய மவுலிவாக்கம் கட்டடம்

முன்னதாக, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கட்டடம் தகர்க்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கட்டடத் தகர்ப்பு பணிகள் தொடர்ந்து தாமதப்பட்டன.

பின்னர் மாலை 4 மணிக்குள் தகர்ப்பு பணிகள் முடிந்து விடும் என்று செய்திகள் வெளி வந்தாலும், அந்த பணிகள் தொடங்கப்படவில்லை. கட்டட தகர்ப்புக்கு தேவையான வெடிபொருள் நிரப்பும் பணி போன்ற பல்வேறு காரணங்களால் இந்தக் கட்டட தகர்ப்பு பணி மாலை 6.30 மணியளவில் தான் நடந்தது.

மொத்தம் 2-3 வினாடிகளில் முடிந்து விட்ட இந்த கட்டடத் தகர்ப்பால், இடிக்கப்பட்ட கட்டடத்தின் அருகாமை குடியிருப்புகளில் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டடம் தகர்க்கப்பட்ட உடனே, இந்த பகுதியில் காலை முதல் நிறுத்தப்பட்ட மின்சார இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அப்பகுதியில் நிறுத்தப்பட்ட போக்குவரத்தும் உடனடியாக சீர் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் முரளிதரன் தெரிவித்தார்.

முன்னதாக,சென்னையின் போருர் பகுதிக்கு அருகில் உள்ள மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 11 மாடிகளைக் கொண்ட இரண்டு குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டிவந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி இதில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் கட்டடத் தொழிலாளர்கள் 61 பேர் இறந்தனர். இந்த விபத்து குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மற்றொரு 11 மாடி கட்டடமும் ஆபத்தான நிலைமையில் இருப்பதால், அதனை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கட்டட உரிமையாளர்கள் தரப்பில் நீதிமன்றத்திற்குச் சென்றனர். உச்ச நீதிமன்றம் இது குறித்து வல்லுனர் குழு ஒன்றை அமைத்து ஆய்வுசெய்தது. ஆய்வின் முடிவில், கட்டடம் உறுதித்தன்மையில்லாமல் இருப்பது தெரியவந்ததால், அதனை இடிக்க உத்தரவிடப்பட்டது.

கட்டடத்தை வெடிகுண்டுகளை வைத்து தகர்க்க முடிவுசெய்யப்பட்டு, அதற்கென திருப்பூரைச் சேர்ந்த மெக்லிங்க் என்ற நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டது. செப்டம்பர் 25-ஆம் தேதியன்று கட்டடத்தை இடிக்கவும் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், திடீரென கடைசி நேரத்தில் கட்டடம் இடிப்பது தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கட்டடம் இன்று இடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.