தீவிரவாத தாக்குதல் நிகழ்வு ஒளிபரப்பு - என்டிடிவிக்கு ஒரு நாள் தடை

இந்திய ராணுவ விமான தளத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த ஒளிபரப்பு முறைக்கு தண்டனையாக இந்தியாவின் என்டிடிவி ஹிந்தி தொலைக்காட்சி சேனலுக்கு 24 மணிநேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பதான்கோட் விமானத்தளம் கடந்த ஜனவரி மாதம் தாக்குதலுக்கு உள்ளானது

ஜனவரி மாதம் பதான்கோட்டில் விமானத்தளம் தாக்குதலுக்கு உள்ளானபோது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களை என்டிடிவி-ஹிந்தி சேனல் ஒளிபரப்பியதாக இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதல் பற்றிய தங்களுடைய ஒளிபரப்பு "குறிப்பிடும்படியாக நடுநிலையானதாக" இருந்தது என்று கூறி என்டிடிவி இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

பதான்கோட் தாக்குதலில் ஏழு இந்தியப் படையினர் மற்றும் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது குழு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.

வெடிபொருட்கள் மற்றும் ராணுவ விமானங்களின் இடங்களை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியமைக்காக என்டிடிவி-இந்தி ஒளிபரப்பு நவம்பர் 9 ஆம் தேதி 24 மணிநேரம் நிறுத்தப்படும் என இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.

பயங்கரவாத தாக்குதல்களில் ஒளிபரப்பு மேற்கொண்ட தொலைக்காட்சி சேனலுக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் முதல் ஆணையாக இது நம்பப்படுகிறது.

இந்த "அசாதாரணமான ஆணை-க்கு பதிலளிப்பதற்கு "சாத்தியக்கூறான அனைத்து தெரிவுகளையும்" மேற்கொண்டு வருவதாக என்டிடிவி தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்