ஜெயலலிதா உடல்நிலையில் சிறப்பான முன்னேற்றம்: பிரதாப் ரெட்டி தகவல்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சிறப்பாக மேம்பட்டிருப்பதாகவும் எப்போது வீடுதிரும்புவது என்பதை ஜெயலலிதா முடிவுசெய்வார் என்றும் அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் இன்று புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி, முதல்வர் நன்றாக உடல்நலம் தேறியிருப்பதாகக் கூறினார்.

தனக்கு வேண்டியவற்றை அவர் கேட்கிறார் என்றும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்றும் பிரதாப் ரெட்டி கூறினார்.

பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் இணைந்து முதல்வரைக் குணப்படுத்தியிருப்பதாக பிரதாப் சி ரெட்டி கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

எப்போது சாதாரண அறைக்குச் செல்வார், வீடு திரும்புவார் என்பது ஜெயலலிதாவைப் பொறுத்தது என்றும் சிகிச்சையின் முக்கியமான பகுதியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுதான் கவனிக்கத்தக்கது என்றும் பிரதாப் ரெட்டி கூறியிருக்கிறார்.

தான் எப்போது வீடு திரும்பி, அரசுப் பணிகளைக் கவனிப்போம் என ஜெயலலிதா எதிர்பார்த்திருப்பதாகவும் ஆனால், எப்போது வீடு திரும்புவது என்பதை ஜெயலலிதா முடிவுசெய்வார் என்றும் பிரதாப் ரெட்டி குறிப்பிட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து செய்திக் குறிப்பு ஏதும் சில நாட்களாக வராத நிலையில், அம்மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதல் முறையாக முதலமைச்சரின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.